சாய்ந்தமருதின் முப்பது வருட போராட்டம், சாணக்கிய நகர்வால் சாதனையானது : அடுத்து கல்முனை மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் - தே.கா. தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் !!
சிறைக்கம்பிகளை எண்ணி, சூடான வீதியில் சத்தியாகிரகம் இருந்து, புரட்சிகளும், எழுச்சிகளும் செய்து முப்பது வருட காலமாக பொய்யான பல ஏமாற்று வித்தைகளை கடந்து பல நாடகங்களை பார்த்து ஏக்கமாக பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்த போது சாய்ந்தமருத்துக்கான நகரசபையை மலர செய்த பெருமை தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களையே சாரும் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும் அக்கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளருமான யூ.எல்.என். ஹுதா தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை வெளியான அதிவிசேட வர்த்தகமாணி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் சாய்ந்தமருத்துக்கான புதிய நகரசபை காலம் ஆரம்பமாகிறது. புதிய நகர சபை அறிவித்தலை தொடர்ந்து சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ரணிலின் பொய்யான நாடகம் அடங்கலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைகள் தமது அரசியலை தக்கவைக்க சாய்ந்தமருது மண்ணை பல வழிகளிலும் ஏமாற்றிவந்த அந்த கசப்பான சம்பவங்கள் உண்மையில் இந்த பிரதேச மக்களுக்கு இழைத்த வரலாற்று துரோகமாகும். மண்ணினதும், மக்களினதும் போராட்டத்தை மதித்து தேசிய காங்கிரஸ் தமது அரசியலை கடந்த சில தேர்தல்களில் செய்யாமல் இருந்த போதிலும் மக்களின் அதிக ஆணையை பெற்று கிழக்கு மண்ணுக்கு சொந்தமான அமைச்சரவை அமைச்சையும் வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த மண்ணில் செய்த காட்டுமிராண்டி அரசியலின் மூலம் எமது மாநகரசபை உறுப்பினர்கள் அடங்கலாக பலரும் சிறைசென்று வந்தனர்.
முஸ்லிம் காங்கிரசின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏனைய அரசியல்வாதிகளினால் எமது மண்ணுக்கு வந்த பல வரப்பிரசாதங்களை நாங்கள் இழந்துள்ளோம். மக்கள் காங்கிரஸ் தலைவரின் நாடகத்தையும் கண்ட எமது மக்களின் போராட்டம் கடந்த தேர்தல்களில் உக்கிரமடைந்து தனியாக போட்டியிட்டு ஒன்பது ஆசனங்களையும் பெற்றோம். இந்த மக்களின் ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேசிய காங்கிரஸ் அத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்துக்கொண்டு தமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது.
அத்துடன் எமது நாட்டின் சிறந்த நகரசபையாக எதிர்காலத்தில் எங்களது சாய்ந்தமருது நகரசபை மிளிர எல்லோரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப தயாராக இருப்பதுடன் தேசிய காங்கிரஸ் தலைமை இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க தன்னாலான சகல உதவிகளையும் வழங்கும் என நம்புகிறேன். கல்முனை மாநகர சபையின் ஏனைய மூன்று சபைகளையும் எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் படி கூடிய விரைவில் யாருக்கும் சேதம் வராமல் சரியான எல்லைகளை அமைத்து பிரித்து கொடுக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் கல்முனை மாநகர சபை, மருதமுனை நகரசபை என்பதுடன் தமிழ் சகோதர்கள் தங்களை தாங்களே ஆளும் ஒரு சபையை கூட உருவாக்க எங்களது தலைமை வியூகம் வகுத்து செயலாற்றி வருகிறது.