Ads Area

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் பர்தா அணிவதை விமர்சித்த தஸ்லிமா நஸ்ரின், பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படத்தின் 10-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா கலந்து கொண்டு தனது தந்தையுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அப்போது மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார். இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது.

சமூக வலைதளங்களில், ‘ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார்’ என்ற கருத்துகள் எழுந்து வந்தன.


இதற்கு அப்போது பதிலளித்த கதிஜா ரஹ்மான், தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் என் பெற்றோர்கள் பொறுப்பல்ல. விவரம் புரியாமல் தேவையில்லாத முடிவுகளுக்கு வரவேண்டாம்’ எனக் குறிப்பிட்டார்.


இதே சர்ச்சையை தற்போது தனது ட்விட்டர் பதிவின் மூலம் மீண்டும் எழுப்பியுள்ளார் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இதுகுறித்த பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா பர்தா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளைப் பார்க்குப் போது எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உள்ளது. பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


இந்தப் பதிவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்திருக்கும் கதிஜா, ஒரு வருடமாக இந்த விவகாரம் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் ஒரு பெண் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.

ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் போது என்னுள் எரியும் தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன்.

நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி. என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்படி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நான் ஏன் விளக்கமளிக்கிறேன் என்று நினைத்தால், தனக்காக ஒருவர் பேசியாக வேண்டியிருக்கிறது. அதனால் தான் இதைச் செய்கிறேன்.

அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக எனக்குப் பெருமையாகவும் நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் உறுதியாகவும் உணர்கிறேன்.


உண்மையான பெண்ணியம் என்றால் என்னவென்று கூகுள் செய்து பார்க்கவும். அது மற்ற பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், அவரது தந்தை பெயரை இணைத்துப் பேசுவதும் அல்ல. உங்களுடைய ஆய்வுக்காக நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாக நினைவில் இல்லை” இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe