வர்த்தகமாணி அறிவித்தல் வந்துவிட்டதா? அல்லது நின்றுவிட்டதா? என்பதில் மட்டுமே இருக்கிறார்கள் : சில உண்மைகள் மருந்தைப்போன்று கசக்கும்- ஏ.எல்.எம். அதாஉல்லா !!
நூருல் ஹுதா உமர்
வாக்குக்காக நான் கொடுப்பதாக இருந்தால் சரியான எல்லைகளுடன் பிரிப்பதற்க்கு எப்போதோ தயாராக இருந்த சாய்ந்தமருத்துக்கான நகரசபையை அகப்பையும், கத்தியும் என்னிடமிருந்த போது அப்போதே வழங்கியிருப்பேன். ஆனால் கல்முனையில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து பேசி அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதை இணக்கமாக முடிக்க வேண்டுமாக இருந்தால் ஒரு ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். நீதி, நியாயங்கள் எல்லாம் மதவாதிகளினாலும் இனவாதிகளினாலும் பிறைக்கொடியா அல்லது புலிக்கொடியா என கோசம் எழுப்பி மழுங்கடிக்கப்பட்டு விட்டது.
பாலமுனை அல்-அரபா விளையாட்டுக் கழகம் நடாத்திய "மெகா நைட் சம்பியன் ட்ரொபி" கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் (22) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இளைஞர்களின் இரத்தம் சூடானதும் வேகமாக பாயக்கூடியதுமானது, போலியான கோஷங்களை நம்பி இளைஞர்கள் ஏமாறக்கூடாது. மாற்றத்தை முன்னோக்கி சிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இளைஞர்களே, பாகிஸ்தானும் இலங்கையும் கிரிக்கட் விளையாடினால் நாம் இலங்கையர் என்ற கௌரவத்துடன் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். அதுவே எமது தேசப்பற்றின் அடையாளம். கட்சி, ஊர், வாதங்களை களைந்து விளையாட்டின் மூலம் நாம் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளோம்.
விளையாட்டு வீரர்களான நாம் இந்த நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும். வளமிக்க எமது நாட்டில் எமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அது போன்று நாம் நமது வருங்கால சந்ததிகளுக்கும் எமது நாட்டை வளமானதாக ஒப்படைக்க வேண்டும். அதற்காகவே நாம் தமிழர், முஸ்லிம், சிங்களவர், என்ற வேற்றுமைகள் இல்லாத சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய அரசியலமைப்பை கோருகிறோம். நாங்கள் ஏனைய இனத்துடன் கடந்த காலங்களில் வாழ்ந்த வாழ்க்கை அழகானது. இப்போது தமது அரசியலுக்கான தமிழர்- முஸ்லிம் என்று பிரிப்பதும் பிரதேசவாதமாக செயற்படுவதுமாக சிலர் இருக்கிறார்கள்.
கல்முனை தொகுதியின் சமீப கால பிரச்சினைகளை இதற்கு உதாரணமாக காட்டலாம். பல ஊர்களிலும் நாங்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். எப்போதும் நாங்கள் நிம்மதியான அரசியல் பாதையையே தேடி செல்கிறோம். நுணுக்கமாக ஆராய்ந்து செயலாற்றுகிறேன். இரு ஊர்கள் தமது சந்தோசத்தை கொண்டாட பட்டாசு கொளுத்தினால் ஏனைய ஊர்களிலும் பட்டாசு கொளுத்துங்கள் என கட்டளையிடும் முட்டாள்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எமது அண்மைக்கிராம மக்களின் பிரச்சினையாக இருந்தால் நாங்கள் நியாயமான முறையில் தீர்த்துவைக்க வேண்டும்.
தமிழ் தலைவர்களின் தலைமையின் பின்னால் எமது தலைவர்கள் பலரும் பயணித்த வரலாறுகள் இருப்பதுடன். பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் எமக்கு படிப்பிக்க வேண்டும் என்பதனால் இஸ்லாத்தை கற்று எமக்கு கற்பித்த வரலாறுகள் இருக்கிறது. எமது நாட்டில் நமது மக்களை நிம்மதியாக வாழவைக்க முயற்சிகள் எடுக்கும் போது நாங்கள் வாக்குகளை கவனத்தில் கொள்வதில்லை.
தமிழர்களையும், முஸ்லிங்களையும் உசுப்பேற்றி அரசியல் செய்யும் வித்தைகளை நாட்டை நேசிக்கும் எம்மால் பாத்துக்கொண்டிருக்க முடியாது. எமது பிரச்சினைகளை நமது நாட்டு சாப்பாடுகளை சாப்பிட்டுக்கொண்டு நாம் நமது நாட்டில் நமக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.