“அண்ணன் எப்போது மண்டைய போடுவான், தின்னை எப்போது காலியாகும்” என்பதுதான் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையே உள்ள வெட்டுக்குத்துக்களாகும்.
மக்கள் செல்வாக்குள்ள பிரமுகர்களின் வெளியேற்றம் மு.காங்கிரசை பாதிக்கும் என்ற நிலையை அறிந்திருந்தும் அவ்வாறான வெளியேற்றத்தினை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளிலும் எவரும் ஈடுபடுவதில்லை.
“இருப்பதென்றால் இரு. போறதென்றால் போ” என்ற அலட்சியப் போக்கு முஸ்லிம் காங்கிரசில் அதிகமாக காணப்படுவது கடந்தகால வரலாறாகும். கட்சிக்காக எவ்வளவுதான் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தாலும் இறுதியில் எல்லாம் பூச்சியமே.
அண்மையில் மு.கா இன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சம்மாந்துறையை சேர்ந்த மாஹிர் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
மு.கா தனிநபர்களில் தங்கியிருக்கும் கட்சியல்ல என்று கூறப்பட்டாலும், சம்மாந்துறை மக்களின் நிலைப்பாடு வித்தியாசமானது. அங்கு பிரமுகர்களினால்தான் கட்சியின் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.
நௌசாத், தம்பிக்கண்டு ஆகியோரின் உழைப்பின் மூலம் எதிர்கொண்ட 2006 பிரதேசசபை தேர்தலை இதனுடன் ஒப்பிட முடியாது. 2004 பொதுத்தேர்தலில் தலைவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தும் சம்மாந்துறை தொகுதியை வெற்றிகொள்ள முடியவில்லை.
மாஹிர் அவர்களின் வருகைக்கு பின்புதான் 2012 இல் மாகாணசபை தேர்தலிலும், 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலிலும் சம்மாந்துறையை முஸ்லிம் காங்கிரசினால் வெற்றிகொள்ள முடிந்தது.
அவ்வாறு இக்கட்டான காலங்களில் கட்சியை தூக்கி நிறுத்தி வெற்றிக்கு உதவியவரின் அர்ப்பணிப்பை கண்டுகொள்ளாமல், நன்றி அற்றவர்களாக சாதாரணமாக நோக்குவது எதிர்காலத்தில் சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் என்பது கட்சியில் அபிமானம் உள்ளவர்களின் கவலையாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது