கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள மேலப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி கதீஜா இந்த தம்பதியின் வீட்டிலும், தோட்டத்திலும் வேலை பார்த்து வந்தவர் சரவணன். இவரது மகள் ராஜேஸ்வரி. எதிர்பாராதவிதமாக சரவணனும், அவரது மனைவியும் இறந்துவிட்டனர். பெற்றோரை இழந்தபோது ராஜேஸ்வரிக்கு 10 வயது தான் ஆகியிருந்தது.
பெற்றோரை இழந்து தவித்த ராஜேஸ்வரியை அவர்கள் தங்களது வளர்ப்பு மகளாக தத்தெடுத்துக்கொண்டனர்.
தத்தெடுக்கப்பட்ட ராஜேஸ்வரியை அவர்கள் இந்து முறைப்படியே வளர்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு 22 வயது ஆனதால் அவருக்கு மாப்பிள்ளை தேடினார்கள். அப்போது கன்ஹன்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவரது ஜாதகம் ராஜேஸ்வரிக்கு பொருத்தமாக அமைந்ததால் அவர்கள் இருவருக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி அப்துல்லா கூறும்போது, ராஜேஸ்வரியை நாங்கள் தத்தெடுத்த பிறகு அவரை இந்து முறைப்படியே வளர்த்தோம். தற்போது திருமணத்தையும் கோவிலில் வைத்தே நடத்தி உள்ளோம். எங்களுக்கு மகள் இல்லாத குறையை தீர்த்த ராஜேஸ்வரி தற்போது கணவருடன் புதிய வாழ்க்கையை தொடங்க மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை பிரிந்த சோகம் எங்களை வாட்டுகிறது. எங்களின் செல்ல மகள் வீட்டிற்கு வரும் நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறோம்.