Ads Area

அமைச்சர் விமல் வீரவன்சவை அங்கொடை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

அமைச்சர் விமல் வீரவன்சவை, அங்கொடை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச காணாமல் ஆக்கப்பட்டோர்களை மண்ணுக்குள்ளிருந்துதான் தோண்டி எடுக்கவேண்டுமெனவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுதலைப் புலிகளே என்பதான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

விமல் வீரவன்சவின் இக் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றையதினம் 09.02 ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொறுப்புக்கூறலில் இருந்து நழுவுவதற்காக கூறப்படும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும், தற்போதைய அரசாங்கம்தான் அனைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் உரிய பதிலை வழங்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அமைச்சர் விமல் வீரவன்ச, அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு முரண்பட்ட கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

வட, கிழக்கெங்கும் ஆயிரக் கணக்கான நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர்ச்சியாகபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்படடோரது உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டெடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இந் நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொருத்தமான வகையில் கருத்துத் தெரிவித்திருக்கின்றாரா என்பதனைப் பார்க்கவேண்டும்.

இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், பொருத்தமற்ற கருத்தை தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்சவினை அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறாக அங்கொடை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்படவேண்டியவர்களை, மக்களின் நலனைக் கவனிக்க இந்த அரசாங்கம் அமைச்சுப்பதவி வழங்கியிருக்கிறார். இவ்வாறானவர்களை அரசாங்கம் அமைச்சராக்குவது எந்தவகையில் பொருத்தமாக அமையும் என்பதையும் கேட்டுக்கெள்ள விரும்புகின்றேன்.

ஏனெனில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போரட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான நிலையில்தான், ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளைத் தாய்மாரும், தங்களுடைய கணவன்மாரை மனைவிமாரும் வட்டுவாகல், ஓமந்தை போன்ற பகுதிகளிலும், ஒவ்வொரு நலன்புரி நிலையங்களிலும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அல்லது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்விடயங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் காலத்திற்கு பின்பு இடம்பெற்றிருக்கக்கூடிய விடயங்களாகும்.

இந் நிலையில் விமல் வீரவன்ச கூறியிருக்கும் கருத்தானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தினைத் தோண்டிப் பாருங்கள் என்று அவர் கூறியதுடன், விடுதலைப் புலிகள்தான் அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். இது எந்தவகையில் சாத்தியமாகும்.

நிச்சயமாக தற்போதைய அரசாங்கம்தான், இந்த மக்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கமாக இருக்கின்றது.

சட்டத்தின் ஆட்சி, அல்லது பொறுப்புக்கூறல் என்ற விடயங்களில், ஏமாற்றுகின்ற வேலையாகத்தான் விமல் வீரவன்சவின் இக் கருத்துக் காணப்படுகின்றது.

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை ஒப்படைக்கும்போதும், அல்லது கணவன்மார்களை மனைவிமார் ஒப்படைக்கும்போதும், தமது உறவுகளை மீண்டும் தம்மிடம் கையளிப்பார்கள் என்று நம்பித்தான் இராணுவத்தினரிடம் கையளித்தனர்.

இவ்வாறு தாமே அவர்களை கைப்பற்றியதுடன், தாமே அவர்களைச் சிறைப்பிடித்த பின்பு, தற்போது அதற்குப் பொறுப்பு நாங்களல்ல விடுதலைப் புலிகள்தான் பொறுப்பென்று சொன்னால் அக்கருத்து எவ்வாறு பொருத்தமாக அமையும்.

ஒரு சரியான அரசாங்கமாக இருப்பின், இவ்வாறாக அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டிய நிலையிலுள்ள அமைச்சர்களை உடனடியாக பதவியில் இருந்து அகற்ற வேண்டும்.

இந்தப் பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் என்றைக்கும் தப்பித்துக்கொள்ள முடியாது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்குமான உரிய பதிலை அரசாங்கம் சொல்லவே வேண்டும் என்பதை திடமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe