இதுவரை காலம் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தின் கீழிருந்த சாய்ந்தமருது பிரதேசத்துக்கென தனியான புதிய நகர சபையொன்றினை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.‘முஸ்லிம் அரசியல் கட்சிகள் இதுவரைகாலம் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி வந்த காலம் மலையேறிவிட்டது. எங்களை நாங்களே ஆளப்போகிறோம். இது எமது நீண்டகாலப் போராட்டத்தின் வெற்றி, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே’ என்று சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர சபையின் சுயேச்சைக்குழு (தோடம்பழ சின்னம்) உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு புதிய நகர சபையொன்றினை குறுகிய காலத்துக்குள் தேர்தலுக்கு முன்பு நிறுவித்தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உறுதியளித்ததாகவும் சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார். அவர் ‘விடிவெள்ளி’ க்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றினை அமைத்துத் தருவதாக முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்களும் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை வழங்கி வந்தார்கள். ஆனால் அவர்களது வாக்குறுதிகள் எவையும் செயலுருப் பெறவில்லை. சாய்ந்தமருது மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்தார்கள். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவும் தாங்கள் பதவிக்கு வந்தால் எங்களுக்கு தனியான சபையொன்றினை உருவாக்கித் தருவதாக உறுதியளித்திருந்தார்கள். அந்த வாக்குறுதிகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எமக்கு தனியான நகர சபையொன்று உருவாக்கப்படவுள்ளது.
இந்தச் சந்திப்பில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இராஜாங்க அமைச்சர்களான விமலவீர திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், சிறியானி விஜேவிக்ரம, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டி ஆரச்சி, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் ஆகியோர் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் தற்போது 13 ஆக உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளை 46 ஆக அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கும்படி பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பொது நிர்வாக அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.
Vidivelli