சாய்ந்தமருது - 05
கடந்த 14.02.2020ஆந் திகதி வெளிவந்த 2162/50ஆம் இலக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையில் சாய்ந்தமருதுக்கான நகரசபை அறிவிப்பு வெளிவந்தது நாமறிந்ததே. இச்சபையின் ஆரம்பத்தினமாக 2022 மார்ச் 20ஆம் திகதியெனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாய்ந்தமருது மக்களின் சுமார் 33 வருட போராட்டத்தின் அறுவடையாக, நகரசபை பிரகடனம் வெளிவந்திருக்கும் இச்செய்தி இம்மக்களுக்கும் மண்ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.
கடந்த 19.02.2020இல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சாய்ந்தமருது நகரசபை விடயம் பேசப்பட்டு, அது குறித்த அறிவிப்புக்களை வெளியிடும் வாரந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர், பந்துல குணவர்த்தன பின்வரும் கூற்றுக்களைத் தெரிவித்தார்.
'சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்காக, 14ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.' என்றும், 'நாடு முழுவதும் காணப்படும் இவ்வாறான விடயங்களை மீள ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இதனை இடை நிறுத்தியுள்ளதாகவும், அதனை முற்றாகத் தடை செய்யவில்லை.' எனவும், 'இந்த வர்த்தமானி தொடர்பில் கடந்த சில நாட்களாக சிலர் முன்வைத்து வரும் எதிர்ப்புக்களால் இந்த வர்த்தமானியை இரத்துச் செய்யவில்லை.' என்றும், 'சாய்ந்தமருது நகரசபையை தற்காலிகமாக இரத்துச் செய்வதற்காக அமைச்சரவை எடுத்தத் தீர்மானம் வெகு விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்.' என்ற கருத்துக்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 19.02.2020 நடைபெற்ற அமைச்சரவையில் சாய்ந்தமருதுக்கான நகரசபை உருவாக்கம் தொடர்பிலான ஆராய்தல் என்பது, முன்கூட்டி அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்தோ, அறிவித்தோ நடைபெற்ற ஒன்றல்ல. மாறாக சடுதியாக அவ்விடத்தில் சமூகமளித்த அமைச்சர்களான விமல்வீரவன்ஸ மற்றும் பந்துல குணவர்த்தன போன்றோர்களினால் பேசப்பட்டு ஆராயப்பட்ட ஒன்று என்பது மட்டும் திட்டவட்டமானது.
சாய்ந்தமருதுக்கான நகரசபையை வழங்குங்கள் என உரிய அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஷபக்ஷதான் சொல்லியிருந்தார். அவர் இந்த அமைச்சரவையில் பங்குபற்றவில்லை எனக் கூறப்படுகின்றது. உரிய அமைச்சரான ஜனக பண்டார தென்னகோன் இப்பிரச்சினை எழும்போது இது பிரதமரின் பணிப்பின் பேரில் நடைபெற்ற ஒன்றென்று எடுத்துக் கூறவில்லை என்கின்ற கருத்தும் இவ்விடயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் அமைச்சரவையில் சடுதியாகவும் விடயங்கள் ஆராயப்பட முடியும் அதன் நிமிர்த்தம் தீர்மானங்கள் மேற்கொள்வதற்கு உரித்துண்டென்பது வெளிப்படையானது.
சாய்ந்தமருது நகரசபை குறித்தான கருத்தாடல் வரும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சமூகமளித்திருக்கவில்லை. அதேநேரம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் போதுமான விளக்கங்களை அங்கு முன்வைக்கவில்லை என்கின்ற நிலைப்பாடும் இருந்திருக்கிறது. இன்னொரு வகையில் நமக்கான முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் என ஒருவரும் அமைச்சரவையில் இல்லாமையும் பெருங் குறைபாடாகும்.
இவை நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அதாவது நமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் அதுவும் அமைச்சரவை அந்தஸ்துக்கு வரக்கூடிய ஒருவரை நடைமுறை அரசாங்கத்திற்கு சார்பானவராகவும் அரசாங்கத்தில் செல்வாக்கு உடையவராகவும் வரக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் அவசியத்தையும் நாம் இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் குறித்தான வர்த்தமானி இரத்துச் செய்யும் கதையாடல் மேற்குறித்த அமைச்சரவையில் ஆராயப்பட்டது என்பதும், அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்தமையும் உண்மையான செய்திகளே. ஆனால் வர்த்தமானி இரத்தாகவில்லை என்பதும் மிகவும் தெளிவானது. ஏனெனில், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் குறித்தான வர்த்தமானியை இரத்துச் செய்து இன்னுமொரு வர்த்தமானி வெளிவரும்வரை முந்திய சாய்ந்தமருதுக்கு நகரசபை பிரகடனம் செய்த வர்த்தமானி வலிதுடையதாகவே இருக்கும்.
சாய்ந்தமருதுக்கான நகரசபை உருவாக்கம் என்பது எதிர்வரும் 2022.03.20ஆந் திகதியாகும். ஆதலால் இது இரத்துச் செய்ததாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவரும் வரை அமுலில் இருக்கும். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது மாற்ற முடியாத ஒன்றல்ல. இது குறித்தும் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிடத் தவறவில்லை. 'அமைச்சரவையில் எடுத்த தீர்மானங்கள் திருத்தப்படும் இரத்துச் செய்யப்படும். இது ஏனைய நாடுகளின் அமைச்சரவையிலும் இயல்பாக நடைபெறும் முறையாகும்' எனக் கூறுவதிலிருந்து பின்வரும் இரண்டு முடிவுகளுக்கு நாம் வர முடியும்.
(1) உள்ளுராட்சி அமைச்சர் சாய்ந்தமருதுநகரசபை உருவாக்கம் குறித்து வெளியிட்ட வர்த்தமானியை இரத்துச் செய்ய முடியும் என்றும் (2) இரத்துச் செய்ய தீர்மானம் மேற்கொண்டமையைக் கூட நடைமுறைப்படுத்தாதும் விட முடியும் என்கின்ற கருத்தையும் இதிலிருந்து பெற முடியும். ஆகவே, கடந்த 14 ஆந் திகதி வெளிவந்த வர்த்தமானி இரத்தாகிவிடும் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டிய தேவையை இது இல்லாமாற் செய்கின்றது. எனினும் இரத்துச் செய்யும் வர்த்தமானி வெளிவரும்வரை நாம் நம்பிக்கையுடன் இருப்பது தவறுமல்ல. காலம்தான் இதற்கான முடிவை நமக்கு அறிவிக்கும் அது வரை பொறுமை காப்பதுதான் சாலச்சிறந்தது.
சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் குறித்து வெளிவந்த வர்த்தமானி இரத்துச் செய்யப்படும் மற்றொரு வர்த்தமானி வெளிவந்தால், அது நமது நாட்டின் அரசியல் நகர்வில் முதல் தடவையாக வழங்கப்பட்ட உள்ளுராட்சி மன்றம் ஒன்று மீளப் பெறப்பட்ட முதல் நிகழ்வாக வரலாறு பதிவு செய்து கொள்ளும். இவ்வாறான செயற்பாடானது இன்றைய அரசாங்கத்திற்கு ஆரோக்கியமான விமர்சனங்களை ஈட்டித் தராது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செய்துகொண்ட ஒப்பந்தங்கள் என்ற அடிப்படையில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு (தோடம்பழச் சின்னத்தில் பள்ளிவாசலின் ஆதரவுடனும், சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி மன்றமே எமது ஊரின் தாகம் என்பதை உறுதி செய்வதற்காக போட்டியிட்டு வெற்றிபெற்ற) அணியுடனும், ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு எனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்துகொண்ட ஒரு விடயமாக சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் இருக்கின்றது.
கடந்த 2020.02.19இல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பானது நமக்கு இரண்டு செய்திகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. (1) நகரசபை உருவாக்குவதற்கு முன்னோடியாக நடைபெற வேண்டிய செயலாளர் நியமனம், கட்டிடத்தை உருவாக்குவது, நிர்வாக ரீதியாக பிரித்தெடுக்க வேண்டிய ஆவணங்கள், சொத்துப் பிரிப்பு சபையின் வட்டாரத்தின் எண்ணிக்கை போன்ற நடவடிக்கையை தற்காலிகமாக தாமதப்படுத்தி வைக்கும். (2) நகரசபை உருவாக்க வர்த்தமானி வெளிவந்திருந்தாலும் அதனை இரத்துச் செய்யும் அதிகாரம் எந்த நேரத்திலும் அமைச்சரவைக்கு அல்லது உரிய அமைச்சருக்கு இருக்கிறது. இவ்விரு செய்திகளும் நமது அவதானங்களிலிருந்து விலகிவிடாது சிந்திப்பதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றது.
குறிப்பாக சாய்ந்தமருது நகரசபையைத் தரும் அரசாங்கத்தையும் பெற்றுத் தருவதில் முன்னின்று உழைத்த அரசியல் பிரதிநிதித்துவமான முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் புறக்கணித்து விடாது இவ்வூர் மக்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் நமது பெரும்பாலான வாக்காளிப்பு ஊடான ஆதரவைத் தெரிவுக்கும் கடப்பாட்டிலிருந்து தூரமாகிவிடாத பண்பைப் பேண வேண்டிய தேவையை அறிவுறுத்துவதிலும் இந்த அமைச்சரவை சலசலப்புக்கு பின்னாலிருக்கும் நியாயம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. பள்ளியை முன்னிறுத்தி வழங்கிய நமது வாக்குறுதிகளை எதற்காகவும் நாம் மீறுவது முறையல்ல என்ற தெளிவும் நமக்கு முக்கியமாகும்.
2019 ஏப்ரல் 21இல் நடைபெற்ற சஹ்ரான் தலைமையிலான குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதல் என்பது முஸ்லிம் சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட ஒரு குழுவினரின் செயற்பாடல்ல. இந்த அணியை, முஸ்லிம் சமூகம் அங்கீகரித்ததும் அல்ல என்பது பட்டவர்த்தமானது. அப்படி இருந்தும் இதனோடு சாய்ந்தமருது நகரசபை பிரகடனத்தை முடிச்சுப்போட்டு கருத்துரைப்பது ஓர் அபத்தமான தொடர்புபடுத்தல் என்பது மிகத் தெளிவானது.
அதுமட்டுமன்றி சஹ்ரான் குழுவினரின் ஒரு பகுதியினர் சாய்ந்தமருதில் தங்கியிருந்தது என்பது ஒரு வாரத்திற்குட்பட்டதாகும். அப்படி இருந்தும் இவர்கள் பற்றி அறிய வந்ததும் உடன் பாதுகாப்புத் தரப்புக்கு சாய்ந்தமருது மக்கள் காட்டிக் கொடுத்தனர். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் குண்டை வெடிக்கவைத்து மாண்டு போனார்கள் என்பதே உண்மையாகும்.
சஹ்ரான் குழுவினரை இவ்வூர் மக்கள் மட்டுமன்றி முழு முஸ்லிம் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத பக்கம் ஆகும். சாய்ந்தமருது மக்கள் காட்டிக் கொடுத்த ஊர் என்று பெருமைப்பட முடியும். இதனால்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணப்பரிசில்கள் வழங்கி கௌரவித்தார். அது மட்டுமன்றி குண்டை வெடிக்கவைத்து மரித்துப்போன உடல்களைப் பொறுப்பேற்கவோ, இவ்வூரின் அடக்கஸ்தலங்களில் அடக்கஞ் செய்யவோ அனுமதி இல்லை என்பதை சாய்ந்தமருது உலமா சபை, ஜும்மாஆப் பள்ளிவாசல் என கூட்டாக அறிவித்து மறுத்த விடயமும் மிகப் பகிரங்கமானது. இப்படியான நிலை இருந்தும் இவ்வூரை தீவிரவாதி சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசுவதற்கு முடியாத ஒன்றாகவிருந்தும், வலிந்து இணைத்துப் பேசும் பேச்சுக்களே அவை.
உண்மையில் சஹ்ரான் குழுவினரை இயக்கியவர்கள் கடந்த ஆட்சியாளர் என்று இன்றைய ஆட்சியாளரும், இன்றைய ஆட்சியாளர்கள்தான் இயக்கியவர்கள் என கடந்த ஆட்சியாளர்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் ஒரு விடயம் தவிர இந்த அணிதான் இயக்கியது என சான்றாதாரத்துடன் நிரூபிக்கப்படாத ஒன்றாகும்.
இவ்வாறான விமர்சனத்துக்கு இன்றைய ஆட்சியாளர்கள் பயந்துதான் அமைச்சரவை சலசலப்பு எனில், அந்தக் குற்றச்சாட்டை அவர்கள் ஏற்றதாக அர்த்தப்பட்டு விடும். மற்றும் சாய்ந்தமருது சஹ்ரான் குழுவின் ஆதாரவாளர்களல்ல, மாறாக காட்டிக் கொடுத்தவர்கள். அதற்குத்தான் இந்த நகரசபை பிரகடன வெகுமதி என்று அரசாங்கம் உரத்துச் சொல்ல முடியும்.
இவ்வாறு மஹிந்த - கோட்டாபய அணியினர் பகிரங்கமாகச் சொல்லத் துணிந்தால், கற்பிதமாகச் சொல்லப்படும் இன, மதவாதக் கருத்துக்கள் வலுவிழந்துவிடும். முஸ்லிம் விரோதப் போக்குச் செயற்பாட்டாளர்களான சிங்கள மக்களின் கும்பலை அடக்கி வாசிக்க வைத்திருக்கும் ஆற்றலும் தீரமும் மஹிந்த - கோட்டாபய அணிக்கேயுண்டு. ஆதலால் வெளிக்கள பரப்புரைக்கு பயப்பட வேண்டிய எதுவும் இவ்வணிக்கு இல்லை. தேர்தல் மேடையில் மஹிந்தவின் பார்வை அல்லது சுட்டு விரல் நீட்டப்படுபவர்கள் வெற்றியாளர்கள் என்ற பதிவின் சொந்தக்காரர். ஆயின் நகர சபை குறித்த பொய்ப் பூச்சாண்டிக் கதைகள் அவர்களின் தேர்தலில் தாக்கம் செலுத்தப் போவதில்லை என்பதும் திட்டவட்டமானது.
சஹ்ரான் குழுவினர் தோற்றம் பெறுவதற்கு முன்பிருந்தே அதாவது கடந்த 1988களிலிருந்தே சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் உருவாக்கப்படல் வேண்டும் என்கின்ற கோரிக்கை இருந்து வந்த ஒன்று. நமது நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்ட ஒரு விடயமாகவும் இன்றுவரை நடைமுறைமையில் இருந்துவருகின்ற உள்ளுராட்சி அதிகாரத்தை கேட்பதும் கிடைப்பதும் ஜனநாயக வழிக்குரிய ஒன்றாகும்.
பின்னர் எப்படி இது தனி இராஜ்ஜியத்திற்குரிய ஒன்றாக மாறும் என்ற அச்சத்தை முன்வைப்பதும், அதனை பேசுபொருளாக்கி, இன, மதவாதமாக மாற்றுவதும் அறிவுடமையாகுமா? நமது நாட்டில் அமைந்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களில், சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று தனித்து வாழும் இடங்களில் உருவாக்கப்படவில்லையா? அப்படி அமைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிறைய சான்றுகள் நமது நாட்டில் உண்டு.
இவ்வாறு தனியே ஒரே சமூகத்தினர் வாழும் பகுதிகள் என்றும், பல சமூகத்தினர் இணைந்து வாழும் இடங்கள் என நமது நாட்டு மக்களின் இருப்பியல் அமைந்திருக்கின்றன. இது இயல்பாகவும், கால மாற்றங்கள் என்ற வகையிலும் அமைந்தவை. இதனால் சமூகங்கள் கலந்தும், தனித்தும் வாழும் உள்ளுராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலைப்பாடுகள் நீண்ட காலமாக காணப்படுகின்றன.
அவை ஒருபோதும், ஒரு தனிச் சமூகம் என்பதற்காக தனி இராஜ்ஜியமாக மாறிவிடும் அபாயம் நிகழ்ந்துவிடவில்லை. ஒரே நாடு என்ற அம்சம்தான் இன்று வரை மேலோங்கி காணப்படுகின்றது. அது மட்டுமன்றி நமது நாட்டு முஸ்லிம் சமூகம் இன்று வரை தனி இராஜ்ஜியக் கோரிக்கை முன்வைத்தவர்களே இல்லை. பின் எப்படி தனி இராஜ்ஜியம் உருவாக்க சாய்ந்தமருது மக்கள் முயல்வர் எனக் கூறுவதே மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பிதம் ஆகும்.
இவ்வாறான ஒரு இன, மதவாத சித்தரிப்புக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்க முற்பட்டிருக்கும் கோணம் எதை நமக்கு எடுத்துக் காட்ட விளைகின்றது? என்கின்ற தேடலும் ஆராய்தலும் நமக்கு முக்கியப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருப்போர்கள் ஆளும் தரப்பினரின் எந்தச் செயற்பாடானாலும் அதனை எதிர்ப்பதும் குறை காண்பதும் எழுதாத ஒரு சட்டம் போன்று நமது நாட்டு அரசியல் போக்கு அமைந்து காணப்படுகின்றது. இதற்கு இசைந்த ஒரு எதிர்த்தாடலாக இதனை நாம் ஒப்புக்கொள்ள அறிவு இடம் தரவில்லை.
ஏனெனில், 2018களில் மலையகத்தில் அம்பகமுவ என்கின்ற ஒரு பிரதேச சபையை நோர்வூட், மஸ்கெலியா, கொட்டக்கல, அக்கரப்பத்தனை என நான்கு உள்ளுராட்சி மன்றங்களை புதிதாக உருவாக்கி மொத்தமாக ஐந்து சபைகளாக உருவாக்கினர். இது நிகழ்ந்த காலத்திலும் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற உருவாக்கம் குறித்தான பேச்சுவார்த்தைகள் அமைச்சரவை மட்டத்தில் இருந்தன. அது ஹரீஸ் எம்.பியின் தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக எதிர்க்கப்பட்டு, அவர் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஒளிந்துகொண்ட வரலாறு வேறு கதை.
இங்கு நமது கவனங்களுக்குரியது எதுவென்றால், அன்று நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சர் மனோ கணேசன் உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்கிக் கொண்டபோதும், அந்த காலகட்டத்தில் சாய்ந்தமருது விவாகரம் பேசப்பட்டும் இவை குறித்து எதுவும் பேசாத ஐக்கிய தேசியக் கட்சியினர் இப்போது மட்டும் கொதித்தெழுவதும் உண்மைக்கு மாறான கருத்துக்களை முன்வைப்பதும் ஏன் என்ற கேள்வியை மேற்கிளம்பச் செய்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சியினரிடமும் இனவாத செயற்பாட்டாளர்கள் இருந்தாலும் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் தமது பேரினவாதப் போக்கை கடைப்பிடிக்காது மறைத்து வைத்துக் கொண்டனர். அவர்கள் அன்று ஆட்சியாளர்களாக இருந்தபடியால் மௌனித்துக் கொண்டனர். இப்போது தாம் எதிர்க்கட்சிதானே எதையும் எதிர்த்துப் பேசலாம் என்ற வகைக்குள் நின்றுகொண்டிருப்பது தமக்கு பாதுகாப்பானது என்று கருதியதினால் இந்தக் கொதித்தெழுதல் சாத்தியமாகி இருக்கலாம் என கருதுவதற்கு வாய்ப்பிருந்தாலும், இதற்கு அப்பால் இதுவொரு திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு செயற்பாடாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது என சாய்ந்தமருது மக்கள் நம்புவதற்கு உறுதியான காரணங்கள் இல்லாமலும் இல்லை.
கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது நகரசபை பிரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போர்களின் முன்னணி செயற்பாட்டாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இருக்கின்றார். இவரது கூற்றுக்கும் எண்ணத்திற்கும் இது விடயத்தில் அவரது கட்சித் தலைவர் றஊப் ஹக்கீமும் உடன்பட்டு செயற்படும் ஒருவராகவே இருந்து வருகின்றார். ஆதலால் இவர்களின் தூண்டுகோலால் விமல் வீரவன்ஸ, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் ஊடாக பொய்ப் பிரசாரங்களை மையப்படுத்தி பூதாகரமாகப் பேச வைப்பதில் பின்புலமாக இருந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.
இவ்வாறான அடிப்படை இல்லை என்றால், எல்லைப் பிரச்சினை இருக்கிறது எனச் சொல்லும் கல்முனை - கல்முனைக்குடி முஸ்லிம் தரப்பினரும் தமிழ்த் தரப்பினரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி இன்றுவரை ஏற்படுத்தவில்லை. ஆகக் குறைந்தது தங்களிடம் அரசியல் அதிகாரம் இருந்ததாக அவர் நம்பிய நல்லாட்சி காலத்திலாவது முயற்சி எடுக்காமை அவரது எதிர்ப்பு உணர்வைக் காட்டப் போதுமானது. இவரது எதிர்ப்பை சரி காண்பது தவிர வேறு வழியில்லாத ஒருவராகவே முன்னாள் அமைச்சர் றஊப் ஹக்கீமும் இருந்தார்.
இவர்களின் கூட்டுச் சதியினால்தான் சாய்ந்தமருது நகரசபை வழங்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை மற்றும் ஊடகங்கள் என எதிர்கதையாடல்கள் அவிழ்க்கப்பட்டதைப் பார்க்கின்றோம். ஆகவே, இவர்கள் மீது சாய்ந்தமருது மக்கள் சந்தேகிப்பது எப்படித் தவறாகும்? ஐக்கிய தேசிய கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இவர்களுக்குண்டு. இதன் மூலம் அவர்கள் சார்ந்த எம்.பிக்கள் ஊடாக மிக பூதாகரத்தை எழுப்புவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. வெளிக்களத்தை சூடேற்றியும் அமைச்சரவையில் எதிரொலிக்கச் செய்யும் தந்திரோபாயமும் இதில் இருக்கலாம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டம் கடந்த 21.02.2020இல் நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் குறித்து தலைமைத்துவம் பேசியவை என கானொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதில் கூட அவர் நகர சபை வழங்கப்பட்டது சரியென்றும், இதனை கண்டித்தவர்களையும் தவறாகப் பேசியவர்களையும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினரையாவது கண்டித்துக் கொள்ளாத ஒரு மெத்தனப் போக்கையே காட்டியுள்ளார். இது கூட அவர்கள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி வைக்கின்றது.
அவர் ஐக்கிய தேசியக் கட்சியினர் மற்றும் இனவாத கும்பலின் கருத்துக்களுக்கு உடனடியாக ஒரு ஊடகச் சந்திப்பை நடாத்தி கண்டித்து இது ஒரு தனி இராஜ்ஜியம் அல்ல என்பதை சுட்டிக்காட்ட முன்வரவில்லை. ரணில் மற்றும் சஜித் என்ற தலைமைகளுக்கு நிலைமையை எடுத்துரைத்து கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிலும் இறங்கவில்லை. மாறாக சாய்ந்தமருது மக்கள் இன்னும் தனது கட்சியின் ஏமாளிகளாக தொடர்ந்து பயணிக்க வைக்கும் எத்தனத்தையே அவர் செய்திருகிறார் என்ற தெளிவு நமது மக்களுக்கு முக்கியம்.
சாய்ந்தமருது நகரசபை பிரகடனத்தில் நமக்கு இன்றிருக்கும் நம்பிக்கையான பக்கங்கள் என்ற வகையில், பின்வரும் மூன்று விடயங்கள் குறித்து மிகுந்த தெளிவுடன் கூட்டுமொத்தமான நமதூர் மக்கள் இருக்க வேண்டிய அவசியத்தை ஞாபகப்படுத்தி வைப்பது எதிர்கால நலன்களுக்கு வழியாகும்.
(1) சாய்ந்தமருது நகரசபை பிரகடன வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டது எனச் சொல்லும் மற்றொரு வர்த்தமானி வெளிவராது இருப்பதும் (2) நகரசபை பிரகடன வர்த்தமானி வெளிவரக் காரணிகளாக அமைந்த பிரதமர் மஹிந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பஷில், மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் ஆகிய சக்திகள் நம்முடன் இருப்பதும் நமதூர் மக்கள் அவர்களுடன் இருப்பதும் (3) நமது பள்ளிவாசல் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நமது நாட்டு முஸ்லிம் மக்களின் பெரும்பகுதியினர் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து, துணிவோடு கோட்டாபயவை ஆதரிக்க முன்வந்தமை.