Ads Area

சாய்ந்தமருது நகரசபையை நாங்கள் எதிர்க்கவில்லை அதே போல் கல்முனை வ.பிரதேச செயலகத்தை எதிர்க்காதீர்கள்.

சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூகம் அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ளோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விடயம் மிக நீண்டகாலமாக பிரச்சினை. கடந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை.

இந்த அரசாங்கமும் தேர்தல் காலங்களில் கடந்த அரசாங்கத்தைப் போல் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியை கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என இன்றுவரை உறுதியாக நம்பி இருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தான் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது. இதனை ஏனைய அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும் பிரிந்தால் வரப்போகின்ற ஒரே ஒரு பிரதிநித்துவத்தை கூட இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதனை அனைத்து தமிழ் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும். 

சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்களாக கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரதமர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். கருணா அம்மான் அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன். 

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு பிரதிநிதித்துவத்தை பெறுவதில் அனைத்து தரப்புடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் இல்லையேல் அதற்கும் முழுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe