Ads Area

மொட்டு மக்களாதரவை இழந்ததன் வெளிப்பாடே மைத்திரியை தவிசாளராக்கியது.

எதிர்கட்சி அரசியல் இலகுவானது. ஆளும்கட்சியை விமர்சித்தே அரசியல் செய்துவிடலாம். நூறு வீதம் சரியான ஆட்சியை யாராலும் மேற்கொள்ள முடியாதல்லவா? அதுவே மஹிந்த அணியினர் கடந்த காலங்களில் செய்தது. அதுவே மஹிந்த அணியினருக்கும் நேர்ந்தது. யாராலும் முகம் கொடுக்க முடியாது போன யுத்தத்தை வென்ற மஹிந்தவையே மக்கள் தூக்கி வீசவில்லையா? அதுவே அரசியல்.

தற்போது மஹிந்த அணியிடம் ஆட்சி இருப்பதால், அவர்கள் பல விடயங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு பல விடயங்களை முகங்கொடுப்பது சவாலாகவும் மாறியுள்ளது. இந் நிலையில் வீராப்பு காட்ட முடியாது. பேயோடு கூட்டு வைத்தாவது வெற்றிகொள்ள வேண்டும். அல்லாது போனால் அனைத்தையும் இழக்க நேரிடும்.

தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் சுதந்திர கட்சியும் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பெயரில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றன. மொட்டுவின் வெற்றிக்கு சு.காவின் பங்களிப்பு அவசியமானது என்பதை இவ்விடயம் தெளிவுபடுத்துகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மொட்டுக்கு சு.காவின் பங்களிப்பு அபரிதமானதென்பதே தேர்தல் முடிவு கூறுகின்ற செய்தியாகும்.

அண்மையில் மொட்டணியினர் ( பெஷில் ராஜபக்ஸ ) தங்களது பங்காளி கட்சிகளை தனித்து சென்று தேர்தல் கேட்குமாறு கூறியிருந்ததாக பரவலான கதை இருந்தது. இது அவர்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களால் இலகுவாக வெற்றி பெற முடியுமென எண்ணியிருந்தமையை காரணமாக குறிப்பிடலாம். இப்போது மொட்டுவினர் மு.ஜனாதிபதி மைத்திரியை தவிசாளராக்கி தேர்தலை எதிர்கொள்ள சிந்திப்பதானது, அவர்களுக்கு முன்னர் போன்ற மக்களாதரவு இல்லையென்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.

ஒரு கட்சியின் தவிசாளர் பதவியென்பது சாதாரணமானதல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டு அணியினர் சு.கவுடன் இணைவதற்கு, எவ்வித விட்டுக்கொடுப்பையும் செய்திருக்கவில்லை. அன்று அவர்களின் கட்சியின் பெயர், சின்ன விடயத்தில் உறுதியாக இருந்தனர். அன்று உறுதியாக இருந்தவர்கள், இன்று அவ் உறுதியிலில்லை என்றால், அங்கு ஏதுள்ளதென்பதை யூகிக்க முடியுமல்லவா? கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டு வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமானதென்பது சொல்லி அறிய வேண்டிய ஒன்றல்ல. இப்போது இவ்விரு கட்சிகளின் இணைவால் மொட்டுவில் சல சலப்பு தோன்றியுள்ளதாம். வால்களுக்கு ஏது தெரியும், தலைகளுக்கல்லவா உண்மையான கள நிலவரம் தெரியும்.

எனவே, குறித்த இரு கட்சிகளிறதும் இணைவானது மொட்டு மக்களாதரவை இழந்து செல்வதன் வெளிப்பாடெனலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe