ராதாபுரம்:
தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் இயங்கும் பள்ளியில் ஆசிரியர் பிரம்பால் தாக்கியதில் மாணவி ஒருவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது இதனால் ஆசிரியர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மகள் முத்தரசி (வயது10). முத்துசெல்வன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி முத்தரசி பாட்டி சுயம்புகனி பராமரிப்பில் இருந்து வருகிறாள். முத்தரசி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த ஒரு மாணவி சரியாக படிக்காததால் ஆசிரியர் ஆதிநாராயணன் பிரம்பால் தாக்கியுள்ளார். அப்போது பிரம்பின் ஒரு பகுதி உடைந்து மாணவி முத்தரசி கண்ணில் விழுந்துள்ளது. இதில் மாணவி வலியால் அழுது துடித்தார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவியின் உறவினர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.