மலேசிய நாட்டில் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்தவர் மகாதீர் முகமது (வயது 94). அந்த தேர்தலின்போது, மகாதீர் முகமதுவுக்கும், மற்றொரு முக்கிய தலைவரான அன்வர் இப்ராகிமுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருந்தது. வயது முதிர்ந்த நிலையில் மகாதீர் முகமது பதவி விலகுகிறபோது, பிரதமர் பதவி அன்வருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அவர்தான் மகாதீர் முகமதுவின் வாரிசு என்று கூறப்பட்டு வந்தார். இந்த நிலையில் மகாதீர் முகமது கடந்த 24-ந்தேதி திடீரென பிரதமர் பதவியை விட்டு விலகினார். அதைத்தொடர்ந்து அவரது ராஜினாமாவை மன்னர் சுல்தான் அப்துல்லா ஏற்றுக்கொண்டார். அத்துடன் அவரை இடைக் கால பிரதமராக தொடரும்படியும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்பேசி தானே அடுத்த பிரதமரை தேர்வு செய்யப்போவதாக மன்னர் சுல்தான் அப்துல்லா அறிவித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வந்தது.
இதற்கிடையே மகாதீர் முகமதுவும் மீண்டும் பிரதமர் பதவியை பிடிக்க ஆசைப்பட்டார். இருவரில் முகைதீன் யாசினைப் பொறுத்தமட்டில் அவர் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள எதிர்க்கட்சிகளான தேசிய முன்னணி கூட்டணி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவற்றின் ஆதரவை பெற்று விட்டார். இதைத் தொடர்ந்து அவரை மலேசியாவின் அடுத்த பிரதமராக மன்னர் சுல்தான் அப்துல்லா நேற்று நியமனம் செய்தார். இதை முகைதீன் யாசின் ஏற்றுக்கொண்டு விட்டார்.
அன்வர் இப்ராகிமைப்போலவே முகைதீன் யாசினும் மலேசியாவில் துணைப்பிரதமர் பதவி வகித்தவர் ஆவார். இவர் 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை நஜிப் அரசில் துணைப்பிரதமர் பதவி வகித்தார். இவர் அப்போது நஜிப்பின் ஊழலை விமர்சித்ததால் பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாதீர் முகமதுவுடன் கை கோர்த்தார். பெர்சாட்டு கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சி 63 ஆண்டு கால தேசிய முன்னணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் மலேசியாவின் 8-வது பிரதமராக முகைதீன் யாசின் பதவி ஏற்றுக்கொள்கிறார். இதன்மூலம் மலேசியாவில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது.