Ads Area

நோய் குணமாக மட்டக்களப்பு செபஸ்ரியான் தேவாலயத்திற்குச் சென்ற முஸ்லிம் குடும்பத்தினர் கைது.

மட்டக்களப்பு புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு முஸ்லிம்கள் தேவாலயத்துக்குள் உட்புகுந்ததையடுத்து குறித்த நால்வரையும் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள  குறித்த தேவாலயத்தில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்தது.  இதன்போது இரு பெண்கள் உட்பட நான்கு முஸ்லிம்கள் ஆலயத்தினுள் உட்புகுந்ததையடுத்து அங்கு ஆராதனையில் ஈடுபட்டிருந்த மக்கள் பீதியடைந்த  நிலையில் அவர்களைப்  பிடித்து அருட்தந்தை ஊடாக பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர்.

இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்பாறை,  இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் ஒருவரின் வாய் பேச முடியாத மகளுக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் இவர்கள் சீயோன் தேவலாயத்துக்கு வந்துள்ளமையும் அங்கு  அந்த தேவாலயம்  பூட்டப்பட்டிருந்ததால் அதன் ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் இவர்கள் வந்துள்ளமையும்  பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe