மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் இன்று (10) ஈடுபட்டனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள், வித்தியாலய நுழைவாயிலை மூடியவாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ´வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்´, ´கொண்டு வராதே கொண்டு வராதே கொரோனாவை எங்கள் பிரதேசத்திற்கு கொண்டு வராதே´, ´இனரீதியாக அழிக்கும் முயற்சியை நிறுத்து - சிறுபான்மை மக்களை இலக்கு வைக்காதே´, ´எமது மாகாணத்தை அழிக்க நேசிக்கும் சதியை நிறுத்து - மக்களை காப்பாற்று´ என்பன பல வாசகங்கள் ஏந்தியாவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களில் முதற்கட்டமாக ஒரு குழுவினர் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இவர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கவுள்ள நிலையில் பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.