Ads Area

மட்டக்களப்பு மாவட்டம் நாளை முழுமையாக முடங்கும் ; தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு.

கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டக்களப்பு - புணானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்பட்டு, 14 நாள்களுக்குக் கண்காணிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்டம், நாளை முழுமையாக முடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன்,

“எமது நாட்டு பிரஜைகள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்களை காப்பாற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு, எம் எல்லோருக்கும் இருக்கின்ற போதிலும், தொற்று வேகமாக பரவிவரும் நாடுகளிலிருந்து வருபவர்களை, இங்கு அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம், சகல வழிகளிலும் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கேனும் நோய்த் தொற்று ஏற்பட்டால், மாவட்டம் முழுவதும் தனிமைப் படுத்தப்பட்டுவிடும் என்றும் இதனால், அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து, நாளை, மாவட்டம் முடக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம், மாவட்டத்தைச் சேர்ந்த எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி, தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுவதுடன், உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன்பெறவேண்டி, இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe