எனக்கு வேட்பாளராகும் எண்ணமில்லை! கட்சிகளை இணைத்து சிறுபான்மையின் உறுதியை காப்பதே எனது இலக்கு!!
எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. ஆனால், மு.கா. , அ.இ.மா.க. இரண்டும் தற்கால சமூக நலன்கருதி இணைந்து செல்வதில் முழு முயற்சியை திணிக்கிறேன் - இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தெரிவித்தார்.
அ.இ.ம.கா.வில் நௌஷாட் போட்டியிடுகிறார் எனும் விடயம் பரவலாக பேசப்படுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக தெளிவுகான ஊடகவியலாளர் கியாஸ் ஏ புஹாரி அழைப்பினை ஏற்படுத்தியபோதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இரு கட்சிகளிலிருந்தும் அழைப்பு வந்துள்ளது. அதை நான் எனது நலன் கருதி ஏற்றுக் கொள்ள தயாரில்லை. சமூகம் முக்கியம். இம் மாவட்ட சிறுபான்மை இனத்தினர் தங்களுக்கான அங்கீகாரங்களை சரியாக பெற வேண்டும் அதற்கு ஒரே வழி கட்சிகள் இணைந்து பயணிப்பதுதான்.
சிலரின் சில்லறை இலாபங்களுக்காக மக்களை இரை கொடுக்க யாரும் முனைவது தர்மமற்றது. நான் தெளிவாக கூறுகின்றேன். எனக்கு வேட்பாளர் ஆகும் எண்ணமில்லை. சமூக நலன் கருதி இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதே சிறப்பு - என ஆணித்தரமாக தெரிவித்தார்.
கியாஸ் ஏ புஹாரி.