சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியது. விலங்குகளில் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் மானிட அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்துள்ளன. சீனாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்தியாவிலும் 28 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ்க்கு மாட்டு கோமியம் மருந்து என்று இந்து மகாசபா தலைவர்கள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். அறிவியல் பூர்வமாக இது நிரூபணம் ஆனதில்லை என்பதால், அவர்களின் கருத்து கிண்டலுக்கு உள்ளானது.
இந்த நிலையில், இந்து மகாசபா தலைவர் சக்ரபானி மகாராஜ், கொரோனாவை கட்டுப்படுத்த மாட்டு கோமியம் பார்ட்டி நடத்த உள்ளதாக கூறியுள்ளார். ”டீ பார்ட்டிகளைப் போல கோமியம் பார்ட்டி நடத்த இருக்கிறோம். இதில், கொரோனா எப்படி பரவுகிறது என்பதை எடுத்துச் சொல்லப்படும்.
கோமியம் மற்றும் பசு சார்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டால் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். நிகழ்ச்சியில் கோமியம் வழங்குவதற்காக கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
பிற விலங்குகளை கொன்று சாப்பிடுபவர்களுக்கே வைரஸ் தாக்குதல் வருகிறது; வைச உணவு சாப்பிடுவர்கள் இதனால் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.