டுபாயில் இருப்பிடமின்றி பாதையோரம் அவதிப்பட்ட நபருக்கு அமீரக குடும்பம் ஒன்றில் வேலை.
எகிப்து நாட்டை சேர்ந்த எசாட் அன்வர் (29 ) வேலைக்காக ஷார்ஜா வந்திருக்கிறார். மோசடி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட இவர் செய்வதரியாது கலங்கிய நிலையில் இரண்டரை மாதங்கள் மசூதிகளிலும், பூங்காக்களிலும் இரவு தூக்கத்தை கழித்திருக்கிறார்.
இந்நிலையில் தான் அமெரிக்காவை சேர்ந்த அமீரக வாசியான திருமதி டெட்ரா ஸ்டீவன்சன் ஷார்ஜாவில் ஒரு காபி ஷாப்பின் நடைபாதையில் ஒவ்வொரு நாளும் அன்வர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவர் மீது இரக்கம் கொண்ட டெட்ரா கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். எசாட் அப்பணத்தை வாங்க மறுத்துவிட்டார். “நான் வேலை செய்து பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். என் அன்பான குடும்பத்தையும் நாட்டையும் பிச்சை எடுக்க நான் விடமாட்டேன் ” என்று எசாட் கூறியுள்ளார்.
எசாட்டின் அவல நிலை குறித்து டெட்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்குள் உம் அல் குவைனின் துணை ஆட்சியாளரான ஷேக் அப்துல்லா பின் ரஷீத் அல் முவல்லாவால் அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
துணை ஆட்சியாளர் ஷேக் அப்துல்லாவின் மனைவி மீரா புட்டி கூறியதில், “இது குறித்த பதிவை படித்த பிறகு அன்வருக்கு உதவ விரும்பினேன். அன்வருக்கு நடந்தது உண்மையானதா என்பதை உறுதிசெய்த பின்னர் நாங்கள் அவரை உம் அல் குவைனுக்கு அழைத்து வந்தோம்” என்று அவர் கூறினார்.
இது குறித்து எசாட் அன்வர் கூறும் போது, “நான் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்துவிட்டேன். ஆனால் கடவுள் எனக்கு அற்புதமான மனிதர்களை அனுப்பினார். எனக்கு கிடைத்த வாய்ப்புக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். சமூக ஊடக பதிவிற்கு பிறகு எனக்கு 15 அழைப்புகள் வந்தன. இப்போது நான் ஒரு அற்புதமான வீட்டில் இருக்கிறேன்” என்றார்.
போலி வேலை வாய்ப்புகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு சலுகைகளை ஆன்லைனில் வெளியிடுகின்றன. அவை அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கேட்கின்றன. எனவே போலி நிறுவனம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நிறுவனங்கள் புதிய ஊழியர்களை வேலைவாய்ப்பு விசாவின் கீழ் மட்டுமே நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் விசிட்டர் விசா மூலம் வேலைக்கு அனுப்ப கூடாது என அதிகாரப்பூரவமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.