Ads Area

ஈஸ்டர் தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை - பேராயர் மல்கம் ரஞ்சித்.

அன்ஸிர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும், கார்தினால் மல்கம் ரஞ்சித்தற்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பொன்று சனிக்கிழமை 29 ஆம் திகதி கொழும்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

நாட்டில் நல்லிணக்கத்தையும், சகஜ நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு கார்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆற்றிய பங்களிப்புக்கு இதன்போது ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டின் சில பகுதிகளில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரம் பெற இருந்தபோது, அதனை தடுத்துநிறுத்துவதில் ஆயர் ஆற்றிய உயர்ந்த பணிக்காகவும், ஜம்மியத்துல் உலமா ஆயருக்கு தனது விசேட நன்றிகளை தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஐக்கியத்துக்காக, ஜம்மியத்துல் உலமா சபை எதிர்காலத்தில் ஆயர் சபையுடன் தொடர் சந்திப்புகளை மேற்கொள்வதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித்,

ஜம்மியத்துல் உலமா நாட்டிற்கு ஆற்றிவரும் சேவைகள் குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் சில வெளிச் சக்திகளின் தேவைக்காக இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மல்கம் ரஞ்சித்துடனான சந்திப்பில் ஜம்மியத்துல் உலமா  தலைவர் றிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் மௌலவி உள்ளிட்டவர்களுடன் ஜம்மியத்துல் உலமா நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe