மாணவர் கவியரங்கத்தில் விருது வழங்கி கௌரவிப்பு
'தமிழா' ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை ஆதரவுடன், சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பாவலர் பசீல் காரியப்பர் நினைவரங்கில் மாணவர் கவியரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இக்கவியரங்கத்திற்கு தென்னிந்தியக் கவிஞரும் எழுத்தாளருமான வித்யாசாகர் தலைமை தாங்கி இருந்தமை சிறப்பம்சமாகும்.
மாணவிகளான யு.எல். பாத்திமா சமீஹா எம். பாத்திமா நுஸ்ஹா பாத்திமா அனீகா, அன்ஷிப் அஹமட், எம்.ஐ. பாத்திமா சீபா,- ஏ.ஜே. அஸ்பாக்,ஏ.எப். அஸ்கியா,- எஸ்.எப். அப்றோஸ் ஆகியோர் கவியரங்கத்தில் பங்கேற்றனர்.சிறப்புக் கவிஞர்களாக
ஏ.ஜே.எப். ஹப்னா, தவராசா ஜீவசுலோஜினி,- ஏ.டினோஜா, செ. பிரபாஜினி ஆகியோர் தெரிவானார்கள்.
வரவேற்புரையை தமிழா ஊடக வலையமைப்பின் ஆலோசகர் மு.இ. அச்சிமுகம்மட் நிகழ்த்தினார். பாவலர் பசீல் காரியப்பர் நினைவுரையை கவிஞர் மன்சூர் ஏ காதிர் நிகழ்த்தினார். பல்வேறு போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மூத்த கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் நிகழ்வுகள் குறித்து உரை நிகழ்த்தினார்.
மூன்று கவிதை நூல்கள் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டன. குறிப்பாக 50 மாணவரின் கவிதைகள் அடங்கிய 'துளிர்களின் பெருநிலம்' என்ற தொகுப்பை பணிப்பாளர் எஸ்.எம். ஜெலீஸ் வெளியிட்டார்.
தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் செ.மு.ஜெலீஸ் தங்களது அமைப்பின் சார்பாக இருபது வருடங்களுக்கும் மேலாக கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பின் பன்முகத்தன்மையைப் பாராட்டி 'கலைமாமணி' எனும் அதிஉன்னத விருதை வித்யாசாகருக்கு வழங்கி வைத்தார்.
கவிஞர் மு.இ. அச்சிமுகம்மட் அவர்களுக்கு 'சந்தக்கவி' எனும் நாமம் சூட்டி கௌரவம் அளிக்கப்பட்டது.
வி.ரி.சகாதேவராஜா