சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா றியாத் நகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் துாதரகம் அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாக தொழிலாளர்கள் பலரும் முகநுால் வாயிலாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா சவுதி அரேபியாவிலும் நிலை கொண்டு சவுதி அரேபியாவையும் நிலைகுலையச் செய்து வருகின்றது இதனால் அதன் வீரியத்தை கட்டுப்படுத்த சவுதி அரேபிய அரசு 24 மணி நேர ஊடரங்கு உத்தரவினை ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில் சவுதி அரேபிய றியாத் நகரில் உள்ள இலங்கைத் துாதரகம் அவ்வப் போது சவுதியில் உள்ள கஷ்டப்படும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு உதவுவதற்கு துாதரகம் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிப்பதோடு, அவசர உதவிகள், ஆலோசனைகள் தேவைப்படுவோர் துாதரகத்தில் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தும்படியும் கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் துாதரகத்தில் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை எற்படுத்தினால் அதனை துாதகரம் கண்டு கொள்வதில்லையென்றும், யாரும் அழைப்பினை எடுப்பதில்லை என்றும், துாதரகம் எங்களை ஏமாற்றி வருகின்றது என்றும் சவுதியில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் துாதரகத்தினால் உணவுத் தட்டுப்பாடு, அத்தியவசியப் பொருள் தட்டுப்பாடு நிலவும் நபர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது அவ் உலர் உணவுப் பொருட்கள் கூட உரிய முறையில் வழங்கப்படாது சிலருக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகவும், உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினால் கூட அதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் சவுதியில் உள்ள தொழிலாளர்கள் குற்றம சாட்டி வருகின்றனர்.
குவைத்தில் உள்ள இலங்கைத் துாதரகமும் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாகவும், யாரையும் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யாதிருப்பதாகவும், தொழிலாளர்களுக்கு எவ்வித உணவு, தங்குமிட வசதிகளை செய்து கொடுக்காதிருப்பதாகவும் அங்குள்ள தொழிலாளர்கள் துாதரகத்தின் முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.