புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை ஒன்லைன் (Online) முறை மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, பரீட்சைகள் திணைக்களத்திற்கு கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சவால்களுக்கு அஞ்சாமல் இந்த பரீட்சை முடிவுகளை மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய ஆர்வமாக செயற்பட்ட பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், பரீட்சைகள் ஆணையாளர் தலைமையிலான அனைத்து அதிகாரிகளுக்கும், கல்வித் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக, அனைத்து மாணவர்கள் தங்கள் முடிவுகளை பார்வையிடலாம் என்பதோடு, அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் இது வரை தபால் மூலம் அனுப்பப்பட்ட பரீட்சை முடிவுகளை இன்று (28) முதல் பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் வசதியின் மூலம், பரீட்சை பெறுபேறு ஆவணங்களைப் பெறவும், பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் பரீட்சைத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தை நெருங்கி வரும் இலங்கை சமூகத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பரப்புவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அணுகுவதற்கும் தேசிய தேவை உள்ளது என்று அமைச்சர் டலஸ் அளகப்பெரும இதன்போது வலியுறுத்தினார்.
(நன்றி - தினகரன்)