கொரோனா வேகமாக பரவிவரும் சூழலில் இந்தியர்களிடத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை நிலவுவதால் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஐக்கிய அரபு இராஜ்ஜிய இந்தியத் தூதர் எச்சரித்துள்ளார்.
அமீரக இந்தியத் தூதர் பவன் கபூர் தனது டிவிட்டரில், ‘இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மதப்பாகுபடுகளுக்கு எதிரான மனநிலையைப் பகிர்ந்துக் கொள்கின்றன. பாகுபாடு என்பது நமது சட்ட விதிகளுக்கும் ஒழுக்க முறைகளுக்கும் எதிரானவை, அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதை உணர்ந்து இந்தியப் பிரதமர் கூற்றுப்படி கவனமாக இருக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமின்றி மற்ற மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த முக்கிய மன்னர் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் இந்தியாவின் செயலை கண்டிக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவில் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகள் கண்டனங்கள் எழுப்பிய நிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘கோவிட் 19 பாதிக்கும் போது இனம்,மதம், நிறம், சாதி குலம், கோத்திரம், மொழி, எல்லை எதையும் பார்க்காது. நாம் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுடன் பொறுப்பாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக் கொள்ள வேண்டும். நாம் என்றும் இணைந்து இருப்போம்’ என பததிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வீ சூர்யா தனது பழைய ட்விட்டர் பதிவில், அரேபியப் பெண்களைக் குறித்து ஆபாச கருத்து தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமீரக தலைவர்கள் என பலரும் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.