Ads Area

நியூயோர்க்கின் 7 லட்சம் முஸ்லிம்களுக்கு இலவச இப்தார் உணவு..!! நியூயோர்க் மேயர் பில் டி பிளாஸியோ அறிவிப்பு

ரமலான் நோன்பு தொடங்க உள்ள நிலையில், நியூயார்க் நகரம் அதன் இஸ்லாம் மக்களுக்கு தினமும் நோன்பு திறப்பதற்கு உணவு வழங்க இருக்கிறது.

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதம் தற்போது தொடங்கியுள்ளது. 30 தினங்கள் நோன்பு மேற்கொள்வார்கள். தினமும் காலை 4 மணி அளவில் நோன்பைத் தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறப்பார்கள். நோன்பு தினங்களில் அனைத்து மசூதிகளும் நோன்பு திறப்பதற்கான உணவுகளை வழங்குவது வழக்கம்.

தற்போது கரோனாவால் மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், உணவின்றித் திணறும், முஸ்லிம்களுக்கு நோன்பு திறக்க தினமும் உணவு வழங்கும் பொறுப்பை நியூயார்க் நகரம் எடுத்திருப்பதாக அதன் மேயர் பில் டி பிளாஸியோ தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 5 லட்சம் அளவில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

ஏற்கனவே கரோனாவால் வேலையிழந்து இருக்கும் நபர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை நியூயார்க் நகரம் மேற்கொண்டு வருகிறது.

86 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நியூயார்க் நகரில் தற்போதைய சூழலில் 20 லட்சம் பேர் உணவின்றித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நோன்பு திறக்க இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்க உள்ளது.

நகரம் முழுவதும் 435 உணவு விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் இங்கு வந்து வாங்கிச் செல்லலாம். வீட்டிலிருந்து வெளிவர முடியாதவர்களுக்கு நேரடியாகவே அவர்களது வீடுகளுக்கே உணவு விநியோகிக்கப்படும்.

ஏப்ரல் மாதத்தில் 1 கோடி அளவிலும், மே மாதத்தில் 1.5 கோடி அளவிலும் இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக நியூயார்க் நகர மேயர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மதம் பற்றிக் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அமெரிக்காவின் 33 கோடி மக்கள் தொகையில் 34.5 லட்சம் அளவில் முஸ்லிம்கள் உள்ளனர். இதில் நியூயார்க் நகரில் மட்டும் 7.5 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி மூலம்  - https://www.khaleejtimes.com
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe