குறைந்தளவிலான தனிமைப்படுத்தல் வசதிகளால் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரல் – பொது மன்னிப்புக்கான கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் குவைத்துடன் இணைந்து இலங்கை செயற்படுகின்றது.
ஏப்ரல் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை (சிரச வானொலி மற்றும் ‘தவச’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்) கருத்துக்களைத் தெரிவித்த செயலாளர், ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பு மற்றும் ஏனைய வழிமுறைகளினூடாக, இன்றுவரை 27,000 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இவர்களுள், 17,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தங்கி வாழ்வோர், 6,000 மாணவர்கள் மற்றும் சுமார் 3,000 குறுகிய கால வீசாவையுடையவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவர்.
மருத்துவத்துறையின் கண்ணோட்டத்தில் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு, தற்போது நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான பணிகளில், மாணவர்கள் மற்றும் தெற்காசியாவில் அரச பயிற்சிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். திருப்பி அனுப்புவதற்கான இந்த செயன்முறையை அமைச்சு, கோவிட்-19 பணிக்குழு மற்றும் பல்வேறு தேசிய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, குறித்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் செயற்படுத்துகின்றன. ஏனைய இடங்களில் அதிகரித்து வரும் இதேபோன்ற சூழ்நிலைகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நாட்டிற்கு மீள அழைத்து வரப்படுவதற்கான தீர்மானம் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு, கொள்கை வகுப்பாளர்களின் கருத்திற்காக பொருத்தமான பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும்.
அங்கீகாரமற்ற 19,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு குவைத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு தொடர்பான நிலைமையானது, அமைச்சின் முக்கியமான அவதானிப்பு விடயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பொது உரையாடலொன்றைத் தொடர்ந்து, பொது மன்னிப்புக் காலத்தை நீடிப்பதற்காக இலங்கை மற்றும் குவைத் அரசாங்கங்கள் கலந்துரையாடி வருவதுடன், அதனை செயற்படுத்தும் முறைமைகள் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குவைத்தின் பிரதம மந்திரி மாண்புமிகு ஷெய்க் சபாஹ் காலித் அல்-ஹமத் அல்-சபாஹ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களுக்கு அமைவாக, இந்த வாரம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் கொழும்பிலுள்ள குவைத் தூதுவர் காலஃப் எம்.எம். பு தைர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் இலங்கைக்கு நபர்களை திருப்பி அனுப்புவதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, பரஸ்பரம் நன்மை பயக்கும் தீர்மானமொன்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
25 ஏப்ரல் 2020