சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட 24ஆவது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே அவர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாகவும், மக்களுக்கு சமய தளங்கள் ஊடாக தெளிவான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வது, ஒன்று கூடுவது, ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் இராணுவ தளபதியினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது புனித ரமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் மாத்திரம் பள்ளிவாசல்களுக்கு சென்று ஒலி பெருக்கிகள் மூலம் மத பிரசங்கங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இருந்த போதிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதித்து செயற்பட வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், நிந்தவூர் பிரதேச சபை பதில் தவிசாளர் சுலைமாலெவ்வை, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத், இராணுவ உயர் அதிகாரிகள், சமய தலைவர்கள், வர்த்தக்சங்க பிரதிநிதிகள், என பலர் கலந்துகொண்டனர்.