அரசியலை உடன்பாட்டரசியல், முரண்பாட்டரசியல், ஒப்பந்த அரசியல் என மூன்றாக பிரிக்கலாம். இதில் நாம் எந்த வகையான அரசியலை செய்ய வேண்டுமென்பதை குறித்த சந்தர்ப்பத்திலேயே தீர்மானிக்க முடியும். தற்போதைய சூழ்நிலையில் ஒப்பந்த அரசியல் மிகப் பொருத்தமானது. இதனை தான் பேரம் பேசல் அரசியல் என்றும் அழைப்பர். இச் சூழ்நிலையில் பேரம் பேசும் அரசியல் பொருத்தமான அணுகு முறையாக இருந்தாலும், சாய்ந்தமருது சபை பெறுதலுக்கு பொருத்தமானதா என்பதே அவதானிக்கத்தக்கது. அண்மையில் முகநூல் தொலைக்காட்சியில் பேசிய தோடம்பழ வேட்பாளர் சலீம், தாங்கள் மொட்டை நேரடியாக ஆதரிப்பவர்கள் அல்ல எனவும், பேரம் பேசியே சாதிக்கப் போவதாகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
மொட்டுக்கு இத்தனை வாக்குகளை பெற்றுத் தருவோம், எங்களுக்கு சபை தாருங்கள் எனும் பேரம் பேசலை தோடம்பழ அணியினர் செய்திருந்தால், அது மிக சாதூரியமான நகர்வாக அமைந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறான ஒரு நகர்வையே தோடம்பழ அணியினர் செய்திருந்தனர். இன்று இந்த நகர்வு அதாவுல்லாஹ்விடம் மண்டியிட்டது எதற்காக. இதனை ஆழமாக சிந்திப்போர் தெளிவான பதிலை பெற முடியும்.
இவ்விடயத்தில் தோடம்பழ அணியின் நகர்வு பிழையானது என்பது துல்லியமாகிறது. இவர்களின் இந்த நகர்வு தோல்வியடையும் போது, அது சாய்ந்தமருதுக்கான சபையை பெறுவதில் தாக்கம் செலுத்தும். தற்போது தோடம்பழ அணியினர் மொட்டணியினரிடம் நேரடியாக செல்லும் தகுதியை இழந்துவிட்டனர். குதிரைக்காக இந்த தகுதியை இழந்தது, தோடம்பழ அணியினர் வகுத்த வியூக பிழைகளில் ஒன்று. இந்த தகுதியை இழந்தது மாத்திரமல்லாது, அதற்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்களா என மொட்டுவை இகழும் நிலைக்கே சென்றுவிட்டார்கள். தோடம்பழ அணியினர் இத்தனை நாளும் பட்ட பாட்டை, மொட்டுக்காக வாங்கிய ஏச்சு பேச்சையெல்லாம் குதிரையை காப்பாற்றச் சென்று வீணாக்கிவிட்டார்களே!
சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவோம் என்பது மொட்டணியினரின் வாக்குறுதிகளில் ஒன்று. அண்மையில் அது வர்த்தமானிப்படுத்தப்பட்டு மீளப்பெறப்பட்டிருந்தது. இப்போது சாய்ந்தமருது சபையை பேரம் பேசியே பெறப்போகின்றோம் என்றால் மொட்டணியினர் சபை விடயத்தில் பின்வாங்கி விட்டார்களா என கேட்க தோன்றுகிறது. பேரம் பேசுதல் என்பது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிடுங்கி எடுப்பது தானே! சலீமின் பேச்சு மொட்டு சபை விடயத்திலிருந்து விலகிவிட்டதையும் தெளிவு செய்கிறது.
சிந்திப்போம்.. செயற்படுவோம்.. சுயநல அரசியல் அஜன்டாக்களுக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது. அது எப்பெயரில் வந்தாலும் சரியே!
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை