முஹமட் றிஸ்வான்.
இன்றைய தேர்தல் களத்தில் "ஊருக்கு MP வேண்டும் என்கிற கோசம் ஆங்காங்கே வலுப்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த கருத்தியல் நமது சமூகம் இலக்குகளற்று பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதான ஐயத்தை உருவாக்குவதை உணர முடிகிறது..
இந்த நிலமைக்கு யார் காரணம்?
இன்று, பொத்துவில் மண் நாளுக்கு நாள் பல நெருக்குவாரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள், அவர்களின் பணியை சரியாக செய்திருந்தால், அந்த மக்களின் நலனுக்காக உண்மையாக உழைத்திருந்தால் இன்று அந்த மக்கள் ஊருக்கு MP வேண்டும் என்று சிந்தித்திருக்க மாட்டார்கள்.
அதே போல தான் அட்டாளைச்சேனை மண்னும் கடந்த காலங்களில் கட்சி யாருக்கு வாக்களிக்க சொல்கிறதோ, அவர்களுக்கு பெருவாரியான வாக்குகளை அள்ளி கொடுத்து MP ஆக்கியும் கூட அவர்களால் அந்த பிரதேசம் கண்ட பலன் எதுவுமில்லை என்றான பின் தான் இன்று அந்த மக்களும் ஊருக்கு MP வேண்டும் என்று சிந்திக்க தலைப்பட்டார்கள். எல்லா ஊர்களிலும் இந்நிலை தான்.
இவ்வாறு அவர்கள் சிந்திப்பதில் தவறுமில்லை. இவ்வாறு ஊர்களைப் பிரித்த அத்தனை பழிபாவங்களும் இந்த அரசியல் தலைவர்களையே சாரும்
வாக்கு என்பது அமானிதம், பொறுப்பு கூறுதல், சாட்சி பகர்தல் என்கிற புரிதல் நமக்கு இல்லாதவரை தொடர்ந்தும் "இந்த சமூகத்தின் தலையில் மிளகாய் அரைக்கப்படுவதை" யாராலும் தடுக்க முடியாது.
தாம் தெரிவு செய்யப் போகிற பிரதிநிதி எந்த ஊரான், எந்த கட்சிக்காரன் என்பதற்கப்பால் அவன் எந்த தரத்தை உடையவன், அவன் அமானிதத்தை பாதுகாக்க கூடியவனா, பொறுப்புக் கூறல் உடையவனா நாட்டுக்கும் தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்காகவும் உழைக்க கூடியவனா என்று சிந்திக்கின்ற பண்பியல் மாற்றம் நம்மிடையே ஏற்படாத வரை நாம் தொடர்ந்தும் கைசேதப்பட்டே ஆகவேண்டி ஏற்படும்.
வரும் காலம் மிக ஆபத்தான காலம். அந்த காலத்தை மிக அவதானமாக கையாள வேண்டிய கட்டாயத்தில் நம் சமூகம் இருக்கிது. அதற்கான திட்டமிடல்களும் அதனை அறிவார்ந்து எதிர் கொள்ளக் கூடிய, திராணியுள்ள, சமூகம் தொடர்பான தூரநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும் எனவே, ஊருக்கு MP வேண்டுமா? சமூகத்திற்கு MP வேண்டுமா? என்பதை சமூகமே தான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: அரசியல் தொழிலல்ல அது அமானிதம் என்பதை கூட புரியாமல்..,
நிருபர் : உங்கள் தொழில் என்ன?
இராஜாங்கம் : அரசியல் தான் எனது முழு நேரத் தொழில்...
என்று பேட்டி கொடுத்த மகான்கள் வாழ்கிற இந்த ஜமான்ல வாழ்வதே நாம் செய்த புண்ணியம் தான்.