பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அறவிடப்படும் திண்மக் கழிவு ( குப்பைவரி) வரியை எதிர்வரும் ஜுன் 1 ஆம் திகதி முதல் மறுசீரமைக்கவுள்ளதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை (21) முற்பகல் மாநகர சபையின் பழைய சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற வேளை சபையில் பல உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கல்முனை பகுதியில் மத்ரஸா வீதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்மக்கழிவு சேகரிக்க சென்ற மாநகர சபை ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்த சம்பவம் புரிந்துணர்வு இரு தரப்பில் இன்மையும் ஒரு காரணம் எனவும் இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்ததாக குறிப்பிட்டார்.எனவே இத்திண்ம கழிவு விடயத்தில் சகலரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கூறினார்.
கல்முனை பகுதியில் மத்ரஸா வீதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்மக்கழிவு சேகரிக்க சென்ற மாநகர சபை ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் சம்பவ தினத்தில் இரு தரப்பினருக்கும் சுமூக நிலைமையை கல்முனை மாநர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம் பறக்கதுள்ளாஹ் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களை கருத்தில் கொண்ட மாநகர முதல்வர் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் ஏற்பட்ட பின்பு குறிப்பாக மாநகர சபை பிரதேசத்தில் வாழும் மக்கள் பாரிய சிரமத்திற்கும் கஷ்டத்துக்கும் உள்ளாகியுள்ளனர் என எமது உறுப்பினர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாகவும் எனவே உறுப்பினர்களின் வேண்டுகோளினை ஏற்று எதிர்வரும் ஜுன் 1 ஆம் திகதி முதல் மறுசீரமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.