வறுமையின் நிறமும்- அடையாளமும் சிவப்பல்ல, செருப்பு என்பதாக அனாதையாக்கப்பட்ட காலணிகளின் துயர் உணர்த்துகிறது. இலங்கையில் பூசி மினுக்கப்பட்டதாய் பிரமை தரும் முஸ்லிம் சமூகத்தின் அவலக்கதைகள் ஏராளம்.
சோனகர்களின் பிரதான வீதிகளையும், கொங்கிரீட் காடுகள் சுமக்கும் மாடி வீடுகளையும் மேலோட்டமாய் பார்த்து விட்டு மேலோட்டமாய் மட்டிட வேண்டாம். ஈமானியர்களின் துயர் படிந்த ஜீவித குறுக்கு வெட்டு முகங்களை ஒரு கணம் தரிசிக்க முனையுங்கள். உண்மையைச் சொன்னால், எம்மில் பலர் வாழவே இல்லை.
கொரோனாவின் பீதி உலகத்தை அச்சுறுத்த ஒரு சாண் வயிற்றுக்காய் யாசகம் ஏந்த சதா அலையும் எம் குலப் பெண்கள், எளிய மனிதர்களின் வாழ்வியல் கோலம் பற்றி ஒரு கணமேனும் சிந்தித்ததுண்டா..? ஆண்டாண்டு காலம் வறுமையில் உழலும் மக்களுக்கு எமதான சமூக அரசியல் முன் வைத்த தீர்வு என்ன..?
வழமையாக புனித ஹஜ் பயணத்தில் தவாஃப் செய்ய சென்ற இடத்தில் இலட்சோப இலட்சம் மக்கள் கூடுகிற போது ஏற்படும் நெருக்கடியில் அகப்பட்டு மரணித்த சேதி கேட்ட எம் சமுதாய மக்களுக்கு இன்று வந்த செய்தியானது செவிகளில் ஆணி அறைந்து விட்டது போலாயிற்று.
கட்டற்ற உணர்ச்சிகளையும், அர்த்தமில்லா விமர்சனங்களையும் சதா முன்வைக்கும் நம்மில் சிலர் உள்நுழைந்து பார்த்து எம் மக்களின் வலிகளை புரிவதில்லை. ஏழ்மையின் ரணம் என்றென்றும் கொடியது தான்.
எஸ்.ஜனூஸ்
21.05.2020