தமிழ் நாடு திருச்சி மாவட்டம், துறையூரில் அண்ணன், தம்பி 2 பேர் வெவ்வேறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்களின் 72 வயது தாய் இளைய மகன் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 11-ந்தேதி இளைய மருமகள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதனால் அந்த மூதாட்டி தனது மூத்த மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்த மூதாட்டியின் இளைய மருமகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மூதாட்டியின் இளைய மகன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு வந்துவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை வீதியில் படுத்து இருந்த அந்த மூதாட்டியை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை, ஆட்டோவில் ஏற்றி மூத்தமகன் வீட்டுக்கு செல்லும்படி அனுப்பிவைத்தனர். தனது தாயை எப்படியும், தன் வீட்டுக்கு தான் அனுப்பிவைப்பார்கள் என்று கணித்த மூத்தமகன், நேற்று முன்தினம் இரவே வீட்டை பூட்டிவிட்டு, திருச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே கொரோனா பீதியில் அந்த மூதாட்டி அங்கு இருக்கக்கூடாது என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த மூதாட்டி நடுத்தெருவில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார்.