எங்கள் வீட்டில் எனக்கும், தம்பிக்கும் கன்னத்தில் குழி விழும். கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டம் என்று அம்மா சொல்லுவார். அப்படி சொல்லிவிட்டார் என்றே, வீட்டிற்கு சொந்த பந்தம் வரும் போதெல்லாம், கன்னத்தில் குழி விழுவதை எல்லோரிடமும் காட்ட, வேண்டுமென்றே சிரிப்பேன். அது ஒரு காலம். கள்ளகபடம் இல்லாமல், விளையாட்டுத்தனமாக சுற்றித்திரிந்த நேரம். பெரியவனான பிறகு கன்னக்குழி கெத்து எல்லாம் மறந்து போச்சு.
ஒருமுறை எதேர்ச்சையாக மனைவியிடன் பேசிக்கொண்டிருந்த போது, "உங்க சொந்தத்தில் மட்டும் எப்படி எல்லோருக்கும் கன்னத்தில் குழி விழுகுது.?" என்று கேட்டாள். அதுக்கென்னமா ஆபரேசனா பண்ண முடியும். இயற்கையா வரது தானே என்றேன். இருந்தாலும் அவள் திருப்தியடையவில்லை. சரி கன்னத்தில் குழி விழ, காரணம் என்னவாக இருக்கும் என்று, நானும் தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தேன். கூகுளிலும் அந்த அளவுக்கு தகவல் இல்லை.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது. கன்னங்களின் தசைப்பகுதிகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான் குழிவிழுவதற்கான காரணமமாம். முகத்தில் ‘ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர் (Zygomaticus Major)’ என்ற தசைப்பகுதியில் உண்டாகும் மாற்றமே கன்னக்குழியாக மாறுகிறது. அந்த தசையின் தடிமனாலோ அல்லது தொடர்ந்து தசையில் ஏற்படும் பிளவாலோ குழி உருவாகிறது. சில நேரங்களில் முகத்தில சேரும் கொழுப்பும், கன்னக்குழி உருவாக காரணமாகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் டிம்பிள் அதிர்ஷ்டம் என்பார்கள்.
வயதாக வயதாக கன்னத்தில் உள்ள கொழுப்பு குறையும் போது, சிலருக்கு கன்னக்குழியும் மறைய ஆரம்பித்துவிடும். அதுக்கு பிறகு பல் எல்லாம் விழுந்து பொக்கை வாயாகிப்போகும். அதனாலும் ஒரு குழி உருவாகும். அப்போதைக்கு அதுவும் அழகு தான் பாஸ். சிலரின் கன்னக் குழியழகை பார்த்து நமக்கும் ஆசை வரும். இவ்வாறான கன்னங்கள் இல்லையே என நினைத்திருப்போம். இப்போது இதுக்கெல்லாம் அறுவை சிகிச்சை வந்துருச்சாம். குழி விழுந்தா அதிர்ஷ்டம் என்ன அதிர்ஷ்டம்? நாங்களே ஒரு அதிர்ஷ்டத்தை உருவாக்குவோம் என்று ரேஞ்சுக்கு வந்துட்டோம்.