சீனாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த வருகின்றனர். உய்குர் பிரிவு இஸ்லாமியர்களான இவர்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்க்ளுக்கு சீன அரசு கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவருது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீனாவின் மோசமான இந்த செயல் குறித்து ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என்ற சர்வதேச அளவில் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இந்த ஆய்வறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று சீனா மறுத்து வருகிறது. ஆனால், தங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் தங்களின் மாதவிடாய் நின்றுபோனதாக, ஜின்ஜியாங்கில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்த முகாம்களில் உய்குர் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்கள் 10 லட்சம் பேர் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டை ஆரம்பத்தில் மறுத்துவந்த சீனா, ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக முகாம்கள் அமைக்கப்பட்டதை பின்னர் ஒப்புக்கொண்டது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள், அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற சீனாவின் கொடுஞ்செயல் வெளி உலகிற்கு தெரிய வந்தது.