இந்தக் கிழக்கு மாகாணத்தின் வரலாறுகளோ, வாழ்க்கை முறைகளோ, விழுமியங்களோ, நிலங்கள் பற்றிய அறிவோ, மக்களின் தேவைகளோ எதுவுமே தெரியாத ஹக்கீமும் ரிசாட்டும் எதற்காக இந்தக் கிழக்குக்கு வந்தார்கள் என்பதை நாங்கள் அறியாமல் இல்லை.மக்களை முட்டாள்களாக்கி கிழக்கு மக்களின் வாக்குகளை சூறையாடி அதன்மூலம் அமைச்சுக்களைப் பெற்று அவர்கள்தான் இலாபமடைந்தார்களே அன்றி இந்தக் கிழக்கு மக்கள் அதனால் எந்தவித இலாபமும் அடையவில்லை என தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா தெரிவித்தார்.
பல ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்கிய அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரிலோ அல்லது அக்கரைப்பற்றிலோ, சம்மாந்துறையிலோ நமது மாவட்டத்தை, நமது மாகாணத்தை தலைமை வகிக்க யாருமில்லையா? அதனால்தான் எங்களை ஏமாற்றி பொழப்பு நடத்தும் முன்னாள் அமைச்சர்களான ரிசாட்டுக்கும் ஹக்கீமுக்கும் வாக்களித்து நமது அத்தனை நலன்களையும் தவிடுபொடியாக்கி அவர்களுக்கே அனைத்தையும் தாரைவார்த்துக் கொடுத்துள்ளோம். இனியும் இந்த மக்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம் கொடுப்பார்களா? அல்லது கிழக்கிலுள்ள தலைமை அதாவுல்லாஹ்வுக்கு வாக்களித்து நமக்கான அமைச்சையும் அதிகாரத்தையும் பெற்று நம்மை நாமே ஆள்வதா? என்பதை நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
தயாகமகே கொடுத்த சில வெகுமதிகளுக்கும், ஐயாயிரம் ரூபாக்களையும் பெற்றுக்கொண்டு அவருக்கு வாக்களித்த குற்றத்திற்காக கடந்த ஆட்சியில் ஐந்து வருடங்கள் விவசாயம் செய்யப்படாமல் கருகிப்போன பல்லாயிரம் ஏக்கர் காணிகளுக்கு தண்ணீர் தராமல் தடுத்ததே அந்த தயாகமகேதான் என்பது எமது விவசாய பெருமக்களுக்கு தெரியாமல் போனதா என்ன ?