(காரைதீவு நிருபர் சகா)
தேசிய உணவு உற்பத்திட்டத்தின்கீழ் மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில் மத்திய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அம்பாறைமாவட்டத்தில் வயல்வரம்புப் பயிர்ச்செய்கை களைகட்டிவருகிறது.
வயலிலுள்ள வரம்புகள் இதுவரைகாலமும் புல்முளைத்து வெறுமனே நடைபாதையாக காட்சியளித்தது. தற்சமயம் அவ்வரம்பையும் பயன்தரு முறையில் பயன்படுத்தலாம் என்பதை விவசாயத்திணைக்களம் ஆலோசனை வழங்கியதன்பெயரில் அச்செய்கை பாரிய பலனைத்தர ஆரம்பித்துள்ளது.
இப்பயிர்களுக்கென நீர் ஊற்றவேண்டிய தேவையோ, உரம் இடவேண்டிய அவசியமோ தேவையில்லை. வயலுக்கு இடும் நீர் உரம் இதற்கும் பயன்படுகிறது. பராமரிப்பும் இலகு. ஆக ஆடு ,குரங்கு, மயில் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பது மட்டுமே சவாலாக உள்ளது. இதற்கும் ஒரு தீர்வு கண்டுவிட்டால் விவசாயிகள் மிகுந்த நன்மையடைவார்கள்.
அதன் ஒரு வெற்றிகரமான அறுவடை நிகழ்வு நேற்று நிந்தவூர் பிரதேசத்தில் விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் மகிழ்சிகரமான இயற்கையான சூழலில் நடைபெற்றது.நிந்தவூர் நடுக்குடி கிழல்கண்ட வயலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தொழினுட்ப உதவியாளர் எம்.எம்.எ.நஜாத் ஏற்பாட்டாளராக திகழ்ந்தார்.
அங்கு கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மரக்கறி பயிர்விதைகள் வழங்கப்பட்டதுடன் விவசாய தொழினுட்ப ஆலோசனைகளும் அதிதிகளால் வழங்கப்பட்டன.
இச்செய்கை விவசாயிகள் மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்றுள்ளது. விவசாயிகள் அர்ப்பணிப்போடு சேவையாற்றும் விவசாய திணைக்கள போதனாசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றியதை அவதானிக்கமுடிந்தது.