ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மாந்துறை பிராந்திய தொகுதிக் காரியாலயம் அக்கட்சியில் போட்டியிடும் சம்மாந்துறை தொகுதி வேட்பாளர் அஸ்பர் உதுமாலெப்பை அவர்களினால் நேற்று (5) திறந்துவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் உரையாற்றிய வேட்பாளர் அஸ்பர் உதுமாலெப்பை சம்மாந்துறை பிரதேசத்தில பல இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பில்லாமல் தொடர்ந்தும் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகின்றனர். இப்போதுள்ள படித்த பிள்ளைகள் 35 வயதாகியும் இதுவரையில் திருமணம் செய்யாமல் தங்களுடைய எதிர்காலம் குறித்து அச்சப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். அதற்கு காரணம் நிரந்தர தொழில் முயற்சிக்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமையும், விலைவாசி அதிகரிப்புமாகும்.
அதுமாத்திரமல்ல எமது பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அழைப்புவிடுக்கின்றேன். கடந்த காலங்களிலும் அழைப்பு விடுத்திருக்கின்றேன்,இந்த நேரத்திலும் அழைப்பு விடுக்கின்றேன்.
கடந்த காலங்களில் நீங்கள் பிரதேச சபை உறுப்பினர்களாக இருக்கும் போது உங்களது வட்டாரத்தில் உங்களுக்கு தெரியாமலே உங்கள் அரசியல் தலைமைத்துவங்கள் கொந்தராத்து அரசியலை செய்தனர். அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை உங்களது வட்டாரத்துக்குரிய அதிகாரங்களை உங்களுக்கே வழங்குவேன். அபிவிருத்திகள் அனைத்தும் அந்தந்த வட்டார உறுப்பினர்கள் ஊடாகவே வழங்கப்படும். அதனை கட்சி பேதங்களுக்கு அப்பால் நான் செய்துதர காத்திருக்கிறேன். அதற்காக எனது கரங்களை பலப்படுத்த முன்வருமாறு மீண்டும் இச்சந்தர்ப்பத்தில் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் திகாமடுல்லயில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.