கட்சியில் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சுகபோக தேவைகள் எதுவும் எனக்கு இல்லை. மு.கா.வுடன் நான் இணைந்ததாக வெளியாகின்ற செய்திகள் அத்தனையும் பொய் என ஆணித்தரமாக கூறினார் தவிசாளர் நௌஷாட்.
தவிசாளர் நௌஷாட் மு.கா.வில் இணைந்தமை குறித்த செய்தியை உறுதிப்படுத்த ‘நியூஸ்ப்ளஸ்’ தொடர்பினை ஏற்படுத்திய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
நேற்று கல்முனையில் மு.கா. முக்கியஸ்தர்களுடன் சந்தித்தது உண்மை. அந்த சந்திப்பானது எவ்வித பேச்சுவார்த்தைகளுக்குமானதல்ல. திகாமடுல்லவில் எவ்வாறு இம்முறை தேர்தலை வெற்றி கொள்வது என்பது என்னிடம் ஆலோசனை கேட்டார்கள்.
நானும் குறித்த கூட்டத்தை புறக்கணிக்காமல் பங்கேற்றேன். நடந்தது இவ்வளவுதான். எனக்கு கட்சி தேவையில்லை. நான் இம்முறை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். என் மீதான வீண் வதந்திகளை தவிர்த்துக் கொள்ளவும் – என்றார்.
இதன் தொடரில் நான் வினவினேன்;
“மு.கா. தலைவர் ரவூப் ஹக்கிமுடன் நீங்கள் பேசியதாக பலரும் கூறுகின்றனர் இதன் விளக்கம் என்ன?”
அதற்கு தவிசாளர் இவ்வாறு கூறினார்;
“நான் மு.கா. தலைவர் என்ற வகையில் சந்தித்ததில்லை. ரவூப் ஹக்கீமாக நட்பு ரீதியில் பலமுறை சந்தித்துள்ளேன். இதில் அவர்கள் கட்சி அரசியலும் பேசப்பட்டுள்ளது. அதற்காக நான் மு.கா. உத்தியோகபூர்வமாக இணைந்ததாக அர்த்தமில்லை.
எது எப்படியோ, நான் தெளிவாக கூறுகின்றேன் ‘மு.கா.வுடன் நான் (நௌஷாட்) இணையவில்லை. இம்முறை தேர்தலில் நான் நடுநிலையாக இருப்பேன் – என ஆணித்தரமாக தெரிவித்தார்.
கியாஸ் ஏ. புஹாரி – நிவுஸ் பிளஸ்.