மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் விசா காலாவதியாகி, சட்ட விரோதமாக அமீரகத்தில் வசித்துவருவோருக்கான கருணை காலத்தினை மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டித்திருக்கிறது அமீரக அரசு.
அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் சயீத் ரக்கான் அல் ரஷீதி (Saeed Rakan Al Rashidi) இதுகுறித்துப் பேசுகையில்,”மே மாதம் 18 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தத் திட்டம் ஆகஸ்டு 18 ஆம் தேதியோடு நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நவம்பர் 17 வரையில் இத்திட்டம் நீட்டிக்கப்பட இருக்கிறது.” என்றார்.
மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களைக் கொண்டிருப்போர் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் அமீரகத்தைவிட்டு வெளியேறும்பட்சத்தில், அவர்கள் தங்களுக்கான ஓவர்ஸ்டே அபராதத்தில் இருந்து விலக்குப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசிட், சுற்றுலா மற்றும் ரெசிடென்சி விசாக்களைக் கொண்டிருப்போர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அமீரகத்தை விட்டு வெளியேறி தங்களுக்கான அபராதத்திலிருந்து தற்காத்துக்கொள்ளுமாறு அல் ரஷிதி தெரிவித்திருக்கிறார்.
அமீரக ஆட்சியாளர்களின் தேசத்திற்கான நலத்திட்டங்களின் தொடர்ச்சியாகவும், இந்த கொரோனா காலத்திலும் மனிதாபிமான செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களைக் கொண்டிருந்து, இந்த கருணை காலத்தில் தங்களது நாடுகளுக்குத் திரும்புபவர்கள், மீண்டும்
அமீரகம் வரத் தடையில்லை எனவும், கருணை அடிப்படையில் நாடு திரும்புபவர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டையும், விமான டிக்கெட்டையும் வைத்திருப்பது அவசியம் என அல் ரஷிதி தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர் கொடுக்கப்பட்டிருந்த கருணை காலத்தில், காலாவதியான விசாக்களை கொண்டிருந்தோர் கருணை மையங்களில் தங்களது பயணம் குறித்து முன்பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால், தற்போது காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களை கொண்டிருப்பவர்கள் நேரடியாக விமான நிலையங்களுக்கே செல்லலாம்.
கருணை காலத்தில் துபாய் வழியாக நாட்டைவிட்டு வெளியேற நினைப்பவர்கள், தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலைய முனையத்தில் உள்ள குடியேற்றத்துறைக்குச் செல்ல வேண்டும்.
அபுதாபி, ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜா விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொள்வோர், தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 6 மணி நேரத்திற்குள் குடியேற்றத்துறைக்குச் செல்ல வேண்டும். 15 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினருடன் வசித்துவரும் காலாவதியான விசாக்களை கொண்டிருப்போர் இந்த கருணை கால திட்டத்தின் அடிப்படையில் குடும்பமாக அமீரகத்தை விட்டு வெளியேறவேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கருணை கால திட்டம் குறித்த சந்தேகங்களை மக்கள் நிவர்த்தி செய்துகொள்ள 800 453 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் காலாவதியான விசாக்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
UAE Web Tamil