Ads Area

முசாரப்பினது தேர்வு, ஆக்கிரமிப்புக்குள்ளாகும் பொத்துவில் மண்ணுக்கு அவசியத்திலும் அவசியமானது.

இளம் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான - முசாரப் முதுநபீனது தேர்வு, ஆக்கிரமிப்புக்குள்ளாகும் பொத்துவில் மண்ணுக்கு அவசியத்திலும் அவசியமானது. சமகால அரசியல் சூழலில் முக்கியமான பாத்திரத்தினை வகிக்கும் பொறுப்புக்குள்ளவராகவும் அவர் தன்னை மெய்ப்படுத்த வேண்டும் !

ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பல்பரிமாணங்களில் முதன்மை பெறக்கூடியது. அதனை அதிகாரத்தின் முன் மண்டியிட்டு, சமரசம் செய்து கொண்டு வெறும் அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகளால் மட்டும் குறுக்கி விட முடியாது. சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும், எதிர் கொள்ளப்போகும் நெருக்கடிகளின் வடிவமும் , ஒடுக்குமுறையாளர்களின் திட்டங்களும் ஆழமானதாகவும், முஸ்லிம்களின் இருப்பினையே கேள்விக்குள்ளாக்கப் போவதாகவும் இருக்கப் போகின்றன. இதில் இலங்கையின் அம்பாறை மாவட்டம் முக்கிய இடம் வகிக்கப் போகிறது.

அம்பாறை மாவட்டம் என்பது , இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் , முஸ்லிம் பெரும்பான்மை மக்கள் வாழும் மாவட்டமாகவும், முஸ்லிம்களின் அரசியல் பிரதி நிதித்துவ பலம் அதிகமான மாவட்டமாகவும் இருக்கிறது. இந்த இருக்கிறது என்கிற ”நிகழ்காலம்” கடந்த இறந்தகாலத்தின் மூலமும், எதிர்காலத்தின் மூலமும் மாற்றி அமைக்கப் பெற்று , சிங்களப் பெரும்பான்மை மாவட்ட மாக்கப்படுவதும், முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார பலத்தினை உடைத்து சிதைப்பதுமே , சிங்கள தேசியவாத அதிகார சக்திகளின் திட்டமாகும். அதற்கான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலின் பின்னும், இப்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் நியமனங்களிலும் , முன்னெடுக்கப்படும் திட்டங்களிலும் , வெளைப்படையான மற்றும் திரைமறவு நிகழ்ச்சி நிரல்களிலும் இந்த விடயத்தினை செய்வதற்கான அதிகார, நிர்வாக, அரசியல் அடித்தளங்கள் ஆழமாக இடப்படுகின்றன என்பது மிகத் தெளிவு.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட , அதாவுல்லாவுக்கு அமைச்சர் பதவி ஏன் வழங்கப்படவில்லை என காரணங்களை வெளியில் தேடும் சிலரைத் தவிர, மற்ற எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம்தான் மகிந்த + கோதாவை நேரடியாக ஆரத்தழுவி நின்ற அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்று நிலை. இந்த தேர்தலில் அவரது கட்சிக்கு அளிக்கப்பட்ட பெருமளவு வாக்குகள் ஒரு முழு அமைச்சராக அவர் ஆக்கப்படுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அளிக்கப்பட்டது என துணிந்து சொல்ல முடியும். அவரது தேர்தல் மேடை பிரச்சாரமே இந்த அமைச்சர் எதிர்பார்ப்பினை மக்களுக்கு அளித்துத்தான் நின்றது.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலமைப்பதவியை அதாவுல்லாவுக்கு மட்டுமல்ல, எந்த முஸ்லிம்களுக்கும் வழங்க முடியாது என்பதே இந்த மேலாதிக்க கருத்து, செயன் நிலையின் பெறுபேறாகும். . இப்போது அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராக , ராஜாங்க அமைச்சரான விமலவீர திசநாயாக்க நியமனம் செய்யப்பட்டு விட்டார். இனி அடுத்த கட்ட பணிகளை முன்னெடுப்பதே அவர்களுக்குள்ள வேலையே தவிர, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதல்ல.

அம்பாறை மாவட்டத்தினை இன்னுமொரு சிங்களப் பெரும்பான்மை , ஆதிக்க மாவட்டமாக மாற்றும் வேலைத்திட்டம் என்பது, சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒரு வேலைத்திட்டமாக , அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுதான். இதில் எந்த அரசாங்கமும் விதிவிலக்கல்ல.அம்பாரையை மட்டுமல்ல, வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ் முஸ்லிம்களின் சனத்தொகையை மாற்றி அமைப்பதன் ஊடாக தமிழ் முஸ்லிம்களின் பெரும்பான்மை பலத்தை இல்லாமல் ஆக்குவதுதான் நோக்கம். வெலி ஒயா , கல்லோயா சிங்களக் குடியேற்றங்கள் இதன் பெரு திட்டங்கள் .ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் போலல்ல இந்த மகிந்த + கோதா அரசாங்கம். அப்போது இருந்த ஒரளவு நெகிழ்வுப் போக்கு இப்போது இல்லை, இன்றைய அரசாங்கத்தின் கருத்து நிலைகளும், முன்னெடுப்புகளும் மிக வெளிப்படையானவை. இந்தியாவில் பீ.ஜே.பி அரசாங்கத்தின் கொள்கைகளை ஒத்தது. பன்மைத்துவத்திற்கும் சிறுபான்மையினரின் அரசியல் பங்குபற்றலையும் முற்றாக வெளித்தள்ளி. பெரும்பான்மையின் அரசாங்கம் இது. இன்றைய அரசாங்கத்தினை கொள்கை அடிப்படையில் வழி நடாத்துகின்ற , இந்த ஏகபோக சதித் திட்டங்களை புனைகின்ற பசில் ராஜபக்ச , அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய ஒரு செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அவர் சொல்கிறார், பாரதீய ஜனதாக் கட்சியே, தமது கட்சியை உருவாக்குவதற்கும், ஆட்சியை வழி நடாத்துவதற்கும் தமக்கு முன்மாதிரியாக இருப்பவை என்கிறார். இது ஒன்றே போதும், இவர்கள் யார்? இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நமக்கு சொல்ல..


மட்டக்களப்பு பெரும் நிலைப்பரப்பிலிருந்து 1961ம் ஆண்டு அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1963ம் ஆண்டின் சனத்தொகை கணக்கின்படி அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 48 சதவிகிதம், தமிழர்கள் 24 சதவிகிதம், சிங்களவர்கள் 28 சதவிகிதமாக இருந்திருக்கிறது. 2012ம் ஆண்டின் சனத்தொகை கணக்கின்படி அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 43.5 சதவிகிதம், தமிழர்கள் 17.5சதவிகிதம், சிங்களவர்கள் 39 சதவிகிதமாக மாற்றப்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தில் திட்டமிடப்பட்டு ஆட்சி அதிகாரபீடத்தினால் முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் சனத்தொகை , சிங்கள குடியேற்றங்களினால் குறைக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. திருக்கோணல்மலை மாவட்டத்தின் நிலையும் இதை ஒத்ததே.

அதுமட்டுமின்றி மிக முக்கிய வளமான குடியிருப்பு, பயிர்ச்செய்கை, மேய்ச்சல் தரை, மற்றும் காடுகளை உள்ளடக்கிய நிலம் பகிரப்பட்டிருப்பதே இவர்களின் அதிகார மோலாதிக்கத்தினை காட்டி நிற்கிறது . அம்பாரை மொத்த மாவட்டம் 4417 சதுர கிலோமீற்றராலானது.இதில் சிங்கள பெரும்பான்மை உள்ளுராட்சி சபைகளைக் கொண்ட அம்பாரைத் தொகுதியும், பொத்துவில் தொகுதியின் தெற்கு எல்லையிலுமான ஆளுகைக்குள் 3456 சதுர கிலோமீற்றர் நிலம் உள்ளது. அம்பாரை மாவட்டத்தின் 78 சதவிகிதமான நிலம் சிங்கள நிர்வாக அதிகாரத்தின் கீழ் உள்ளது.

இம்மாவட்டத்தின் ஏனைய முன்று தொகுதிகளான கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளின் கீழ் உள்ள , முஸ்லிம், தமிழ் பெரும்பான்மை உள்ளுராட்சி சபைகளிடம் 958 சதுர கிலோமீற்றர் நிலம்தான் உள்ளது.

அதாவது 1963ம் ஆண்டின் சனத்தொகை கணக்கின்படி 28 சதவிகிதமாக இருந்த சிங்களவர்களிடம் இன்று 78 சதவிகித நிலமும் . 72 சதவிகிதமாக இருந்த முஸ்லிம் தமிழரிடத்தில் இன்று 22 சதவிகித நிலமுமே உள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழர், முஸ்லிம்களிடையேயான முரண்பாடுகளின் பிரதான அம்சமே இந்த நிலம்தான். ( விரிவஞ்சி இதனை மேலும் இங்கு விபரிக்கவில்லை).

இப்போது நான் எழுத வந்த எனது இளம் நண்பனும், இன்று பொத்துவில் பிரதேசத்தில் இருந்து இத்தேர்தலில் பராளுமன்றத்திற்கு அந்த மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முசாரப் முதுநபீனது முக்கியத்துவமும் அவரது பணியையும் சொல்வதே இக்குறிப்பின் பிரதான நோக்கம். 

மேற்சொன்ன பகைப்பின்புலத்தில், அம்பாரை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசம்தான் இன்றைய இந்த சிங்கள மேலாதிக்க ஆக்கிரமிப்பின் நெருக்கடிமிகு பூமியாக உள்ளது. அம்பாரை மாவட்டத்தில் தீகவாபி, மற்றும் பொத்துவில் மூதுமஹா விகாரையை அண்டிய பிரதேசங்கள்தான் இன்றைய அரசாங்கத்தின் இலக்கு.

தீகவாபியை அண்டிய ஒலுவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை பெரு நிலப்பரப்பும், மூதுமஹா விகாரை அமைந்துள்ள பொத்துவில் பிரதேசமும்தான் தொல்பொருள் திணைக்களம் நிலத்தினை தோண்டி, சிங்கள வரலாற்றினை தேடும் மண் பிரதேசங்கள். பொத்துவில் மக்கள் நேற்று, இன்று, நாளை எதிர் கொள்ளப்போகும் முக்கிய நெருக்கடிமிக்க பிரச்சினை இது. அந்த மக்கள் இந்த ஆக்கிரமிப்பு , அச்ச சூழலின் நிமித்தம் தமது மண்ணிலிருந்து தமக்கு காவலனாக, சிறந்த ஆளுமையுள்ள இளம் பாராளுமன்ற பிரதி நிதியை தெரிவு செய்துள்ளனர். இத் தெரிவை இன்றைய அம்மக்களின் பாரதூரம் அறிந்தவர்கள் , அரசியல்,சமூக நேர்மையுடன் முதலில் பாராட்ட வேண்டும்.

கடந்த கால ஒரு படுகொலை அனுபவத்தினை வைத்து இதனை இன்னும் வலுவாக சொல்ல முடியும். 2006 செப்டம்பர் 18ம் திகதி பொத்துவிலை சேர்ந்த 19 வயது தொடக்கம் 35 வயதுக்குற்பட்ட ஏழை முஸ்லிம் விவசாயிகளான 11 பேர் மீது இறாத்தல் எனும் பயிர்ச்செய்கை, குளத்தினை அண்டிய இடத்தில் வைத்து, அந்த இரவு நேரத்தில் கொடூர படுகொலை ஒன்று நடாத்தப்பட்டது. இதில் 10 பேர் மரணமடைந்தனர். ஒருவர் படுகாயமுற்ற நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த படுகொலைக்கும், சிங்கள மேலாதிக்க நில, அதிகார ஆக்கிரமிப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. பல தடவை இங்கு இருந்த முஸ்லிம் ஏழை விவசாயிகள் இலங்கைப் படையினராலும், சிங்கள குடியேற்றவாதிகளாலும் தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.

இப்படுகொலையை அடுத்து பொத்துவில் மக்கள், இப்படுகொலைக்கு காரணமானவர்கள் இலங்கைப் படையினர்தான்( எஸ்.ரி.எஃப்) என சொன்ன போதும், இப்படுகொலையின் கொடூரத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட கரீம் மீரா முகைதீன் என்பவர் இப்படுகொலைகளை எஸ்.ரி.எஃப் இனர்தான் செய்தனர் என ஆஸ்பத்தியில் இருந்து கொண்டே தெளிவாக சொன்ன பின்னும், அன்று அம்பாரை மாவட்டத்தினை சேர்ந்த , அமைச்சராக இருந்த ஒரு முஸ்லிம் அப்படுகொலைகளை விடுதலைப் புலிகள்தான் செய்தனர் என பகிரங்கமாக வாதித்தார்.

உண்மையில் அன்று இந்த நெருக்கடியை எதிர் கொள்ளும் பொத்துவில் மக்களுக்கு ஒரு மண்ணில் இருந்து ஒரு அரசியல் பிரதிநிதி இருந்தால், இந்த அ நீதியை கட்சி வேறுபாடுகளைக் கடந்து சொந்த மக்களின் துயரோடு நின்று தட்டிக் கேட்டிருப்பார் என நிச்சயமாக நம்பலாம்.


இக்கட்டுரையாளருக்கு இன்றைய பாராளுமன்ற ஜனநாயாக வழிமுறையால் மட்டுமே மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை கடந்த பார்வை உள்ளவர். ஆனால் ஆகக் குறைந்தது இந்த பாராளுமன்ற அரசியல் பாதை வழிமுறையை, ஒடுக்கப்படும் மக்களின் இன்றைய குறைந்த பட்ச நிலைக்கான மாற்றத்துக்கு பயன்படுத்த முடியும் என நம்புபவராகும். அதே நேரம் இலங்கையிலுள்ள எந்த கட்சியினதும் உறுப்பினரோ ஆதரவாளரோ அல்ல.

இன்றைய அம்பாரை மாவட்டத்தின் நிலையிலும், அதிலும் குறிப்பாக பொத்துவிலின் நிலையிலும், இளம் நண்பர் முசாராபின் தெரிவு முக்கியமானதாகும் அது ஒரு வரலாற்று வெற்றிடத்தின் அடியில் இருந்து எழுந்ததாகும். அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குள் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இந்த மாவட்டத்தில் இம்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு ஒரு பலமான குரலாக முசாரப் இருப்பார் என்கிற நம்பிக்கையே இன்று எனக்கும், இவரைத் தெரிந்தவர்களுக்கும் உள்ளது.

கட்சி வேறுபாடுகளைக் கடந்து, குறுகிய பிரதேச மாயைகளை உடைத்து, இன, மத வேறுபாடுகளை மேலும் மேலும் வளர்க்க தூபமிடாமல், ஒடுக்கப்படும் மக்களின் உள்ளார்ந்த குரலாக, ஒடுக்குமுறையாளர்களின் முன் சரணடையாது- சமகாலத்திலும், எதிர்காலத்திலும் முசாரப் முதுநபீன் ஆற்றப் போகும் பாத்திரமும் பணியுமே அதனை நிரூபிக்கட்டும்.

இப்போது ஒடுக்கப்படும் மக்கள் சமூகங்களில் இருந்து , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கும் , இப் பதவிகள் பஞ்சு மெத்தைகளாகவும், சொகுசு வாழ்வாகவும் அமையப் போவதில்லை என்பது நிச்சயம். ஏனெனில் இலங்கையில் இனி நடை பெறப் போகும் அரசியல், ஒடுக்கப்படும் மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமே ஒழிய, அது புத்த பகவான் முன் மொழிந்த அன்பு, இரக்கம், கருணை, நீதி சார்ந்ததல்ல. 

Fauzer Mahroof
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe