Ads Area

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் தற்போது எடுத்துள்ள அதிரடி தீர்மானங்கள்.

(சப்னி)

இந்த தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டு இருக்கிறோம் என்றாலும் பணம் பொருட்கள் கொடுத்து மாமூல் அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுநபீன் தெரிவித்தார்.


தனக்கு  வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று (09) மாலை  பொத்துவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

காசு, பணம் கொடுத்து பொத்துவில் மக்களை ஏமாற்ற முடியாது, நேர்மையான அரசியலை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த வெற்றியில் எமது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரது பங்களிப்பும் உள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் 39 இடங்களில் காணிப்பிரச்சினை உள்ளது. வேகாமம் காணி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். அதேபோன்று ஏனைய காணிப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் காணி பிரச்சினையை கையாளும் குழுவை இன்று அழைத்து தகவல்களை பெற்றுக் கொண்டேன்.


பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பதில் ஆள் ஓழுங்கின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

நாளை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மும்மத பெரியார்களையும் சந்தித்து மத நல்லிணக்கத்திற்கு வழியமைக்க உத்தேசித்துள்ளேன். பொத்துவிலில் இனமுரண்பாடுகளை இந்த மாவட்டத்திற்கு வெளியிருந்து வந்து ஏற்படுத்த யாருக்கும் இடமளிக்க முடியாது.

முகுது மகா விகாரையை மையப்படுத்தி முஸ்லிம் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த இடமளிக்க முடியாது. முகுது மகா விகாரை தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அந்த புனிதமான இடத்தில் ஒரு வேலிக்கட்டையை உடைத்து முஷாரப்பின் ஆதரவாளர்கள் உடைத்ததாக முரண்பாடுகளை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிப்பதற்கு இடமளிக்க முடியாது எனக் கூறினார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe