Ads Area

அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை, என்ன நடந்தது..??

(ஏ.எல்.நிப்றாஸ் - வீரகேசரி) 

ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவு என்பது வேறு எதற்குப் பொருந்துகின்றதோ இல்லையோ அரசியலுக்கு நன்றாகவே பொருந்தும். உள்ள10ர் அரசியல் தொடங்கி சர்வதேச அரசியல் வரை இவ்வாறான போக்குகளை தொடர்;ச்சியாகக் காண முடியும். அரசியல் இலாப நட்டக் கணக்கில் இதுவொன்றும் அதர்மமாக மாட்டாது. 

ஒரு ஆட்சியை வீழ்த்துவதற்காக இன்னுமொரு தரப்பு துரும்புச் சீட்டாக பயன்படுத்தப்படுவதும், தேர்தலில் வெல்வதற்காக சிறுபான்மைக் கட்சிகள், தலைமைகள் கறிவேப்பிலை போல பயன்படுத்தப்படுவதும் பின்னர் புறந்தள்ளப்படுவதும் புதியதல்லவே. குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்வதை, பெருந்தேசியக் கட்சிகள் அவர்களுக்கு செய்கின்;றன. அவ்வளவுதான்! 

தற்கால, முற்கால எல்லா பெருந்தேசிய தலைமைகளும் சிறுபான்மைக் கட்சிகளை தமது தேவைக்கு ஏற்றாற்போல்தான் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இதனை தமிழ்த் தேசியம் முன்னமே உய்த்தறிந்து கொண்டு ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு வருகின்றது. ஆனால் இன்னும் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் இதனை விளங்கிக் கொள்ளவில்லை என்பதை விட, விளங்காதது போல் பாசாங்கு செய்கின்றது என்பதே உண்மையாகும். 

இதனால் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து நீண்டகால அடிப்படையில் கௌரவமான இணக்க அரசியலையும் மேற்கொள்ளாமல், உருப்படியான தனித்துவ அடையாள அரசியலும் இன்றி, ஒரு இரண்டும்கெட்டான் அரசியல் பாதையில் பயணித்து கிட்டத்தட்ட இன்று முஸ்லிம்களின் அரசியல் ஒரு முட்டுச் சந்துக்குள் வந்து நிற்கின்றது. 

தமது வியூகங்களை மீள்பரிசீலனை செய்து சரிப்படுத்திக் கொள்ளாத தலைவர்கள், தளபதிகள் இருக்கும் வரை, தாம் ஆதரிக்கும் தலைவர்களின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பும் இலட்சக்கணக்கான மக்களும், சமூக வலைத்தளங்களில் மானம் போவது கூடத் தெரியாமல் வாதிட்டுக் கொண்டிருக்கும் போராளிகளும் இருக்கும் வரை இந்த நிலைமை மாறுமா என்பது சந்தேகம். இதில் யாரும் விதிவிலக்கல்லர். 

சுருங்கக் கூறினால் இலங்கை முஸ்லிம்களின் கட்சிசார் அரசியல் என்பது இப்போது 'எல்லாப் பக்கங்களிலும்' அதற்குரிய மரியாதையும், அந்தஸ்தும் இழந்து கேட்பாரற்ற நிலைக்கு வந்து கொண்டிருப்பதான ஒரு உணர்வு மேலீடே, பீடிகையாக இதனைச் சொல்வது காரணம் என்பதை வாசகர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். 

இரண்டு நிகழ்வுகள்

ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருக்கமான விசுவாசியாகவும், ராஜபக்சாக்களை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை எப்போதும் மாற்றிக் கொள்ளாத ஒரேயொரு முஸ்லிம் கட்சித் தலைவராகவும் கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கோ அல்லது மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் எம்.பி. ஒருவருக்கோ புதிய அரசாங்கத்தில் இந்தக் கணம் வரை அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. 

அதேபோன்று, முஸ்லிம்களினதும் தமிழர்களின் கணிசமான வாக்குகளை பெற்றுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது, இரு முஸ்லிம் கட்சிகள் உள்ளடங்கலாக சிறுபான்மைக் கட்சிகளுக்கு வழங்குவதாக ஏற்கனவே உடன்பட்டிருந்த தேசியப் பட்டியல் உறுப்புரிமைகளை வழங்காமல் விட்டுள்ளது. 

இவை இரண்டு சம்பவங்களுக்கும் பல நியாயங்களும் காரணங்களும் இருக்கி;ன்றன. என்றாலும், பெருந்தேசியக் கட்சிகளால் முஸ்லிம் கட்சிகள் தேர்தல் எனும் ஆற்றைக் கடக்கும் வரை பயன்படுத்தப்பட்டு, பின்னர் கைவிடப்படும் அளவுக்கு மதிப்பிழந்து போயிருக்கின்றதா என்ற கேள்வியும் கவலையும் மேலெழுவதைத் தடுக்க முடியாதுள்ளது. 

அறுதிப் பெரும்பான்மை
நீண்டகாலத்திற்குப் பிறகு இலங்கையில் அறுதிப் பெரும்பான்மையுடனான ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்பது கடந்த காலத்தில் ஒருவித பயத்தை விதைத்து விட்டுப் போயிருக்கின்றது. இப் பலம் எதையும் செய்வதற்கான அதிகாரத்தை வழங்குகின்றமையால் சிறுபான்மையினர் மட்டுமன்றி சில போதுகளில் பெரும்பான்மைச் சமூகமும்; 'பார்வையாளராகவே' இருக்க வேண்டி வரலாம் என்பதே யதார்த்தமாகும். 

ஒருவேளை, 'நமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்து விட்டதுதானே' என்ற அடிப்படையில், நீண்டகாலம் அதிகாரத்தில் கோலோச்சுவதற்காக மிகச் சிறப்பான ஆட்சியொன்றை பொதுஜனப் பெரமுண அரசாங்கம் முன்கொண்டு செல்லலாம். இனவாத, மதவாத குழப்பக் காரர்களுக்கு மருந்து கட்டுவதுடன், இன ஐக்கியத்தை அபிவிருத்தியையும் சகவாழ்வையும் நோக்கிப் பயணப்படுவதற்கான கதவுகளும் திறந்துள்ளன. ஆகவே, ஜே.ஆரை போலன்றி நாட்டு மக்களின் நலனுக்காக ராஜபக்சாக்கள் இப்பலத்தை உபயோகிப்பதற்கும் நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 

இருப்பினும், பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானதும் 19ஆவது திருத்தத்தை திருத்துதல், மாகாண சபை முறைமையில் திருத்தம், தேர்தல் முறைமை மாற்றம் என பல்வேறு நகர்வுகளை புதிய அரசாங்கம் மேற்கொள்ளக் காத்திருக்கின்றது என்பது வெளிப்படையானது. உண்மையில் நாட்டுக்கு அவசியமான சில மாற்றங்களும் இதில் உள்ளடங்கும். 

இந்நிலையில், நாட்டில் எவ்வகையான கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ அல்லது ஐ,தே.க.வின் எதி;ர்கால தலைவரோ எதனையும் எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில், சிங்கள மக்களில் முக்கால்வாசிப் பேர் மொட்டுச் சின்னத்திற்கே வாக்களித்திருக்கின்றார்கள் என்ற சூழலில், பொதுஜனப் பெரமுணவை எதிர்ப்பது என்பது சிங்கள மக்களின் ஆணையை அங்கீகரிக்காத செயலாக அமையும் எனக் கருதி, ஏனைய பெருந்தேசிய தலைவர்கள் 'அடக்கி வாசிக்க' தொடங்கி விட்டார்கள் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 

இந்தப் பாராளுமன்றத்தில் எத்தனை முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தாலும், அரசாங்கத்தின் ஆதரவின்றி அவர்களால் எதையும் சாதிப்பது சாத்தியமற்றதாகவே இருக்கும். ஆளும் அணியில் இருப்பவர்கள் 'ஆமா' போடுகின்றவர்களாகவும் எதிரணியில் இருப்பவர்கள் வெறுமனே பாராளுமன்றத்திற்கு போய் வருகின்றவர்களாகவுமே அதிக காலத்தை கடத்த வேண்டியிருக்கும். அமைச்சர்களாலும் ஒரு 'எல்லைக் கோட்டை' தாண்டி பயணிப்பது சாத்தியமில்லை. 

தமக்கு அதிகாரமும், ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆற்றலும் இருந்த காலத்திலேயே முஸ்லிம் சமூகத்திற்காக பேசாத முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப் பிரசாரத்தைப் பயன்படுத்தி இந்த மக்களுக்காக குரல் கொடுக்காத தளபதிகள், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தை எதிர்த்து, முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவார்கள், அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்று யாராவது நினைத்தால் அதைவிடக் கற்பனை வேறொன்றும் இருக்க முடியாது. 

தேசியப் பட்டியல்

இத்தேர்தலில், மூன்று முஸ்லிம் கட்சிகளும் தமது சொந்தச் சின்னத்தில் தலா ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸிற்கு மொத்தமாக முறையே 5, 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். இம்முறை நாட்டில் மொத்தமாக 16 முஸ்லிம் எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 4 பேர் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்கின்றனர். 

இந்நிலையில், சஜித்தின் ஐ.ம.சக்திக்கு 7 தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளே கிடைத்தன. எனவே அதனை முஸ்லிம் கட்சிகள் விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால், 'நாங்கள் உடன்படிக்கை செய்திருக்கின்றோம் எப்படியும்'; பெறுவோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறினர். அத்துடன், தமக்கு தேசியப் பட்டியல் தர வேண்டும் என்ற நெருக்குவாரங்களும் மு.கா., ம.கா. கட்சிகளுக்குள் ஆரம்பித்திருந்தன. 

ஆனால், கடைசியில் அது முஸ்லிம், தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கவில்லை. தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு போட்டி நிலவியது மட்டுமே இதற்குக் காரணம் எனக் கூற முடியாது. இருப்பினும், தேசியப்பட்டியல் ஆசனங்கள் போதியளவு கிடைக்கப் பெற்ற பொதுஜனப் பெரமுண கட்சி இது விடயத்தில் சிறப்பாக செயற்பட்டுள்ளது எனலாம். 

'அதா'வின் அரசியல்

இதை விட முக்கியமாக இன்று முஸ்லிம் அரசியல் பரப்பை நிரப்பியுள்ள விவகாரம் தேசிய காங்கிரஸ் தலைவரான அதாவுல்லா எம்.பி.க்கு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்படவில்லை என்பதாகும். இதுபற்றி ஏராளம் கதைகளும் ஊகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

கிழக்கு மாகாண அரசியலில் ஏ.எல்;.எம். அதாவுல்லாவுக்கு ஒரு முக்கிய வகிபாகம் இருக்கின்றது. 'அதாவுல்லா சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பது அரிது' என்பதான பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், கிழக்கில் மர்ஹூம் அஷ்ரபுக்குப் பிறகு சிறந்த அபிவிருத்தி அரசியலைச் செய்த இரு முஸ்லிம் அரசியல்வாதிகளுள் ஒருவர் என்பது அவரது அரசியல் எதிரிகளும் ஏற்றுக் கொள்கின்ற விடயமாகும். 

2005ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அதாவுல்லா ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கின்றார். அதற்கிடையில் ஏனைய முஸ்லிம் தலைவர்கள் எத்தனையோ தடவை கட்சி மாறி விட்டனர். ஆனால், அமரர் ஆறுமுகன், டக்ளஸ் தேவானந்தா போன்று மஹிந்தவுடன் தொடர்ச்சியாக இணைந்திருந்த (மைத்திரி காலத்தில் சற்று நிலைப்பாடு மாறினாலும்) ஒரேயொரு முஸ்லிம் கட்சித் தலைவர் அதாவுல்லா ஆவார். 

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இனவாத நெருக்கடிகளை முஸ்லிம்கள் எதிர்கொண்ட போது, அளவுக்கதிகமாகவே தேசிய காங்கிரஸ் தலைவர் அதனை நியாயப்படுத்திப் பேசினார். அந்தளவுக்கு ஆட்சியாளர்களை நம்பியிருந்தார். அதுமட்டுமன்றி, 'யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வடக்கையும் கிழக்கையும் பிரித்தமைக்காக நாம் மஹிந்தவுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்' என்று பகிரங்கமாகச் சொன்னார். இது முஸ்லிம் சமூகத்திற்குள் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அவர் பொருட்படுத்தவில்லை. 

2015ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமான முஸ்லிம்கள் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்த போதும், அதாவுல்லா மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டார். இதன் காரணமாகவே அவர் தோற்கடிக்கப்பட்டார் என்று சொல்ல வேண்டும். 

மிகுந்த எதிர்பார்ப்பு

எவ்வாறிருப்பினும், தனது தவறுகளை மீள்வாசிப்புச் செய்து புதிய வியூகத்துடன் இத் தேர்தலில் தனது கட்சியின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தின் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி, பொதுஜனப் பெரமுணவுக்கு ஆதரவளித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கான ஆசனங்களில் ஒன்றை அதாவுல்லா குறைநிரப்புச் செய்துள்ளார். 

எனவே இவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவரும் கடுமையாக நம்பியிருந்தார். ஆனால், ராஜபக்ச குடும்பத்திற்கு எப்போதும் துணைநின்ற டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஆகியோருக்கு அமைச்சு வழங்கப்பட்ட போதும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சோ இராஜாங்க அமைச்சோ அதாவுல்லாவுக்கு வழங்கப்படாமை நம்ப முடியாததாக இருந்தது. 

2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. அச்சந்தர்ப்பத்தில் 'அதாவுல்லா இருந்திருந்தால் முழு அமைச்சைப் பெற்றிருப்பார்' என்றும் பேசப்பட்டது. அந்தளவுக்கு விசுவாசமானவராக இருந்தார். 

இப்போது 150 எம்.பி.க்கள் பொதுஜனப் பெரமுணவின் பக்கம் இருக்கின்றனர். எனவே அமைச்சுப் பதவிக்கு கடும் கிராக்கி இருந்தது. ஆனால், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 28 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களை 40ஆகவும் மட்டுப்படுத்த அரசாங்கம் முன்னமே தீர்மானித்து விட்டது. எனவே யாருக்குக் கொடுப்பது என்பதில் பல்வேறு தர்மசங்கடங்களை ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்கொண்டனர் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்நிலையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஜனாதிபதியின் வழக்கறிஞரும் அண்மைக்காலமாக பொதுஜனப் பெரமுணவுக்காக உழைத்த தேசியப்பட்டியல் எம்.பி.யுமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அப்பதவிக்கு பொருத்தமானவர் என்பதுடன், பலரது அழுத்தத்தையும் தாண்டி ஜனாதிபதி முஸ்லிம் ஒருவரை நீதி அமைச்சராக நியமித்துள்ளமை நன்றிக்குரிய விடயமாகும். 

இருப்பினும், முஸ்லிம்களின் நேரடியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அதாவுல்லா போன்ற கட்சித் தலைவர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்பதும், இராஜாங்க அமைச்சர்களிலும் முஸ்லிம்கள் இல்லை என்பதும் முஸ்லிம் அரசியலில்; மட்டுமன்றி சாதாரண மக்களிடையேயும் இனம்புரியாத உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதாவுல்லாவும் ஆட்சியாளர்களால் பொருட்படுத்தப்படவில்லையா? என்ற மனக் கிலேசம் ஏற்பட்டிருக்கின்றது. இது பற்றி பல ஊர்ஜிதமற்ற தகவல்கள் உலா வருகின்றன. 

என்ன நடந்தது?

அதாவுல்லாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், பின்னர் இராஜாங்க அமைச்சே கிடைக்கும் சாத்தியம் இருப்பதாக அறியக் கிடைத்தது. இந்நிலையில், அவர் பதவியேற்பு நிகழ்விலும் கலந்து கொண்டார். அங்கிருந்து இடைநடுவில் வெளியேறிச் சென்றதாக கூறப்பட்ட போதும், பகலுணவு வரை அங்கேயே இருந்தார் என்பதே உண்மையாகும். 

அவருக்கு அமைச்சு வழங்கப்படவிருந்த போதும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி வழங்கப்படாமையாலேயே அவர் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கவில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அத்துடன் அவருக்கு வழங்கவிருந்த அமைச்சு பதவி கடைசித் தருணத்தில் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் பேச்சடிபடுகின்றது.

ஆனால், அமைச்சு கொடுப்பதற்கு அவர்கள் உண்மையிலேயே தீர்மானித்திருந்தார்களா? பட்டியலில் பெயர் இருந்ததா? என்பது யாருக்குமே உறுதியாக தெரிந்திருக்காத நிலையில் அடிப்படையற்ற கதைகளெல்லாம் நம்பும்படியாக இல்லை.

அதாவுல்லா ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த போதும்;, மைத்திரி சு.கா. தலைவரான பிறகு கொஞ்ச நாட்கள் அவருடன் தொடர்பை பேணவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸ் இரு சபைகளை கைப்பற்றியது. 

பாராளுமன்ற தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் 3 வேட்பாளர்களை நிறுத்த பெரமுண உடன்படாமையால் அதாவுல்லா தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அத்துடன், ஜனாஸா எரிப்பு விடயத்தில் அவர் பொறுமை இழந்து சில கருத்துக்களை கூறியிருந்தார். இதுவெல்லாம் ராஜபக்சக்களை சந்தோசப்படுத்தும் விடயங்களாக இருந்திருக்காது. 

இதேவேளை, முஸ்லிம் கட்சிகளின் வளர்ச்சியை தடுப்பதில் பெருந்தேசியக் கட்சிகள் விழிப்புடன் இருக்கின்ற சமகாலத்தில், இம்முறை அதாவுல்லாவின் வெற்றியைத் தடுப்பதற்கும், அவருக்கு அதிகாரமுள்ள பதவிகள் கொடுக்கப்படுவதை தடுப்பதற்கும் பெரமுணவின் சிங்கள வேட்பாளர்கள் பகீரத பிரயத்தனங்களை எடுத்ததாக பரவலாக பேச்சடிபடுகின்றது. 

இதுவெல்லாம், ஆட்சியாளர்களின் தீர்மானத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது . (மேலும் சில தகவல்களை பொது வெளியில் எழுத முடியாது)

இது பற்றி தெளிவைப் பெற்றுக் கொள்வதற்காக தே.கா. தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவை நாம் தொடர்புகொண்ட போதும் அம்முயற்சி பதிலளிக்கவில்லை. ஆயினும், 'அவர் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நோக்கோடு அன்றைய தினம் தலதா மாளிகைக்குச் செல்லவில்லை என்றும், அங்கிருந்து வெளிநடப்புச் செய்யவில்லை' என்றும் அவருக்கு நெருக்கமான ஒருவர் எம்மிடம் கூறினர். 

எது எப்படியிருப்பினும், அன்றைய தினம் அதாவுல்லாவுக்கு ஒரு இராஜாங்க அமைச்சையாவது வழங்கியிருக்க வேண்டும். உண்மையில் ராஜபக்சாக்கள் நினைத்திருந்தால் எந்தத் தடை வந்தாலும் அப்பதவியை கொடுத்திருப்பார்கள் என்ற அடிப்படையில் பார்த்தால், ஆரம்பத்தில் அதாவுல்லாவுக்கு அமைச்சு வழங்கும் திட்டம் இருக்கவில்லை அல்லது அதனை பலமான யாரோ தடுத்து அதாவுல்லாவை புறமொதுக்க நினைத்திருக்கின்றார்கள். கடைசித் தருண முயற்சி கைகூடவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. 

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதாவுல்லாவுக்கு அமைச்சை வழங்க கடும் முயற்சிகளை எடுத்துள்ளதாகவும், பாராளுமன்றம் கூடிய பிறகு ஏதாவது ஒரு அடிப்படையில் அதாவுல்லாவுக்கு இன்னும் சில நாட்களில் அமைச்சொன்றை வழங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் உயர் அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாக தெரியவருகின்றது. அதாவுல்லாவின் விசுவாசத்தை அவர்கள் குறைமதிப்பீடு செய்யமாட்டார்கள் என்பது திண்ணம். 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல, காரியம் சாதிக்கக் கூடிய அரசியல்வாதிகளுக்கு எம்.பி. பதவியோ அல்லது அமைச்சுப் பதவிகளோ பெரிய விடயங்களல்ல. ஆனால், பெருந்தேசியக் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளையும், அரசியல் தலைமைகளையும் அதனூடாக மக்களையும் பெருந்தேசியக் கட்சிகள் ஒரு பொருட்டாக கருதாமல், கையாள முனைகின்றன என்பதற்கு இவ்விரு சம்பவங்களும் ஆகப் பிந்திய உதாரணங்களாகும். 

எனவே, ஆளும் தரப்பு மற்றும் எதிரணி என இரு பக்கங்களிலும் முஸ்லிம்களின்; அரசியல் பலமிழந்து போவதை புரிந்து கொண்டு சாதுர்யமாக செயற்படுவது குறித்து முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு சிந்திக்காத வரைக்கும், ஏமாற்றங்களே விதியென்றாகலாம்.

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 16.08.2020)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe