கத்தார் நாட்டின் சூட்டையும் குளிரையும் சொல்லி விளங்கப்படுத்திவிட முடியாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அந்த அளவிற்கு உடலை வாட்டி வதைக்கும்.
அப்படியான அகோரமான வெயிலின் வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு நாட்டிற்கு அனுப்புவோர் பட்டியலில் நமது பெயரையும் உள்வாங்க மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு காலை ஆறு மணி தொடக்கம் இந்நேரம் வரை கத்தார் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் முன்னால் வரிசையில் நிற்கும் இவர்கள் என்னதான் சாபம் பெற்று வந்தனரோ யாரும் அறியார்.
என்பது வீதத்திற்கும் அதிகமானோருக்கு போதியளவு வருவாயை பெற்றுக்கொள்ளும் இடம் வெளிநாடு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லைதான். ஆனாலும் வருவாயோடு சேர்த்து செலவும் நத்தை போல் ஒட்டிக்கொள்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
மாதாமாதம் பெறும் சம்பளத்தை தன் தேவை பற்றி சிந்தியாமல் முழுவதுமாக குடும்பத்திற்கு அனுப்பி விட்டு பிறரிடம் கடனுக்காக கையேந்துபவர்கள் எத்தனையோ பேர் இங்குள்ளனர். இவ்வாறான கடன்கள் வருட முடிவில் பெரும் சுமையாக வந்து நிற்கும்போது அவர்கள் படும் வேதனை சொல்லிலடங்காது.
இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் ஊரில் பிறருக்கு ஏதும் உதவி தேவை என்றாலும் கடன் பட்டேனும் சமூக சேவையாளர்களுக்கோ, ஊரின் அமைப்புகளுக்கோ உதவிகளை வழங்கி வைப்பதிலும் இவர்கள் பின் நின்றதே இல்லை.
இப்படியான துன்பத்தையே காலாதிகாலமாக அனுபவித்து வரும் நம்மவர்கள் பலர் தற்போது அதை விட பலமடங்கு வேதனையை அனுபவித்து வருவது சொல்லிலடங்காத ஒரு விடயமாகும்.
ஆறு மாதங்களாக தனக்கும் ஏதுமின்றி ஊரிலுள்ள தன் குடும்பத்திற்கும் அனுப்பி வைக்க ஏதுமின்றி நடைப்பிணமாக வாழ்ந்து வருவதென்பது துன்பத்தின் உச்ச கட்டமாகவே பார்க்க வேண்டி உள்ளது.
நாட்டிற்கு சென்று ஏதாவது கூலி வேலை செய்தாவது குடும்பத்தை காப்போம் என நினைத்து இலங்கையின் தூதுவராலயம் சொல்வோருக்கு ஒரே பதில்தான் கிடைக்கின்றது. அரசாங்கம் விமானத்தை அனுப்பினால் உங்களை நாங்கள் அனுப்பி வைப்போம். ஆறு மாதங்களாக இதே பதிலை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பலர் இழந்து விட்டனர்.
தற்கொலையை தவறென்று மட்டும் வேதங்கள் கூறியிரா விட்டால் இற்றை வரை எத்தனையோ உயிர்கள் தூதுவராலய வாயிலின் முன் நீங்கியிருக்கும்.
இது பார்த்து விட்டு கடந்து செல்ல வேண்டிய விடயம் அல்ல. குறிப்பிட்டோரை சென்றடையும் வரை செயார் செய்யுங்கள். முடியுமானால் இதை ஆங்கிலத்திலும் , சிங்களத்திலும் மொழி பெயர்த்து விடுங்கள். கடல் கடந்து வாழும் நம் உறவுகளுக்காக உங்களால் இச்சிறிய உதவியை மட்டுமாவது செய்திட முன்வாருங்கள்.
நன்றி.
அப்துல் ஹபீழ்
கத்தார்

