Ads Area

தவராசா கலையரசன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் தமிழரசுக்கட்சி தலைமைக்கு பாராட்டுக்களும்!

எம்.பௌசர் 

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் , அம்பாரை மாவட்டத்தில் இழக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தினை , தமக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவமாக இருந்தும் , அந்த ஒரேயொரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை அம்பாரை தமிழ் மக்களுக்கு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அதன் தலைமையான இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் பாராட்டு தெரிவிப்பதில் எமக்கு எந்த தயக்கமும் இல்லை.

இன்றைய நிலையில் , அந்த முக்கியமானதும், துணிச்சல் மிக்கதுமான அரசியல் முடிவினை எடுத்தமை பலரதும் கவனத்தையும், பெரும்பான்மையான சமூக , ஜனநாயக சக்திகளின் சாதக அபிப்பிராயத்தினையும் உருவாக்கி உள்ளதை காண முடிகிறது. தமிழ் மக்களுடன் மட்டும் இந்த முடிவின் தாக்கமும் பெறுமாணமும் மட்டுப்படுத்தப்படவில்லை. அது கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் உறவுடனும், வாழ்வுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. அது பற்றி சொல்வதற்கும் இந்தக் குறிப்பு அவசியமாகிறது.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியும் அண்மையில் எடுத்த அரசியல் முடிவுகளில் , இந்த முடிவு முக்கியமானது என உறுதியாக சொல்ல முடியும். இந்த முடிவு அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை மட்டுமல்ல, தமிழரசுக்கட்சியை சார்ந்தவர்கள், கட்சிகளுக்கு வெளியே இருந்து சுயாமாக சிந்திப்போர், செயற்படுவோர் என பலரையும் ஒரு முன்மாதிரியான முடிவு என சொல்ல வைத்திருப்பதுடன், அத் தலைமையின் அரசியல் முதிர்ச்சியையும், அதன் வியாபித்த அரசியல் , சமூகப் பார்வையும் இந்த முக்கிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது.

சம்பந்தன் ஐயா, சுமந்திரன், துரைரட்ணசிங்கம் ஆகியோர் இந்த முடிவை எடுப்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்திருக்கின்றனர். தனக்குத்தான் இந்த பிரதிநிதித்துவம் வேண்டுமென விடாப்பிடியாகக் கேட்டு இறுதியில் விட்டுக் கொடுத்த மாவை சேனாதிராசா ஐயாவும் , தங்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என விமர்சனங்களை முன்வைத்த , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய தமிழ் கட்சித் தலைவர்களும் இறுதியில், இந்த முடிவு, வர்த்தகமானியில் வெளிவந்ததற்கு ஏதோ வகையில் அவர்களது பங்களிப்பும் இருப்பதால் அவர்களும் தம்மை , இந்த முடிவு தொடர்பாக அரசியல் ரீதியாக கௌரவப்படுத்திக் கொள்ளலாம்.
அம்பாரை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய ஒரு ஏழை மக்கள் நிறைந்த விவசாயக் கிராமமான நாவிதன் வெளிப் பிரதேசத்தில் இருந்து , அதன் முன்னாள் தவிசாளரான தவராசா கலையரசன், இந்த சிக்கல் மிகுந்த நேரத்தில் நியமிக்கப்பட்டது பல்வேறு வகைகளில் , இன்றைய நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் அரசியலின் உள்ளடக்கம், அதன் மக்கள் பார்வை, அதன் தலைமைகளின் அரசியல் முதிர்ச்சி மட்டுமல்ல , வடக்கு கிழக்கினை தளமாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளும், அதன் பின்னால் அணி திரண்டு நிற்கும் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரும் இந்த முன்மாதிரியான முடிவில் இருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஏனெனில், கடந்த காலங்களில் இந்த முஸ்லிம் கட்சிகள் சொல்லப்படுபவை, தனக்கு காலத்திற்கு காலம் கிடைத்த தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவங்களை , ”தலைமைக்கு விசுவாசம்” என்கிற ஒரு பித்தலாட்டத்தினை முன் வைத்து, சொந்த சகோதரர்களுக்கும், கட்சிக்கும் எம் .பியான ஆளுக்கும் சம்பந்தமில்லாதவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், கூட்டிக் கொடுப்பவர்களுக்கும் கொடுத்து , முஸ்லிம் அரசியலை காயடித்து , வியாபாரமாக்கிய ( கறுப்பு) வரலாறு உண்டு.

அடுத்தது, கருணா போன்றவர்கள், இந்த தேர்தலில் அம்பாரைக்கு வந்து தேர்தல் கேட்டது முக்கியமானது. அதில் மூன்று பிரதான இலக்குகள் கருணாவுக்கு, தனது இன்றைய எஜமானார்களால் வழங்கப்பட்டது. ( முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் சில இலக்குகள் வழங்கப்பட்டன)
கருணாவுக்கு வழங்கப்பட்டதில் ஒன்று- தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதன் வழியாக , அம்பாரையில் மொட்டுக் கட்சியை வெல்ல வைப்பது.
இரண்டு தமிழ் முஸ்லிம்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தி அதனை வளர்ப்பது.

மூன்றாவதாக தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தினை குறைப்பதுடன் அதன் அரசியல் தலைமைகளை பல்வீனப்படுத்துவது. இந்த மூன்று பிரதான இலக்கிலும் அதன் எஜமானர்கள் கணிசமான வெற்றியை பெற்றிருக்கின்றனர். அம்பாரையை வென்றிருக்கிறார்கள், தமிழர் முஸ்லிம்களிடையே முரண்பாட்டினை மூலும் கூர்மைப்படுத்தி அதனை நிறுவனமயப்படுத்தி, அம்பாரையின் தமிழ் மக்களின் இரச்சகனாக கருணாவை நிலை நிறுத்தியுள்ளனர்.

அம்பாரையில் தமிழர் பிரதிநிதித்துவம், இந்த தேர்தலில் இல்லாமைப் போனமைக்கு முஸ்லிம்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாமே ஒழிய, தமிழ் மக்களுக்கு உரித்தான அந்த பிரதிநிதித்துவம் , இந்த விகிதாசார தேர்தல் முறையின் காரணமாக, ஒரு முஸ்லிம் பிரதிநிதி தேர்வாக வாய்ப்பினை தந்ததை முஸ்லிம்கள் யாரும் மறுக்க முடியாது என்பதே உண்மை.

கிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கு இடையிலான உறவும் வாழ்வும் என்பதை கிழக்கில் அரசியல் செய்யும் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளோ, கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களோ ஏனோ தானோ என கடந்து போக முற்படாதீர்கள். அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால் நம் எல்லோருக்குமான படுகுழிகளை நாம் எல்லோரும் சேர்ந்துதான் தொடர்ந்தும் வெட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகும்.

தமிழ், முஸ்லிம் முரண்பாடு இரு இனங்கள் மத்தியிலும் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பல் வேறு தளங்களிலும், பல்வேறு மட்டங்களிலும் , பல்வேறு துறைகளிலும் ஆழ வேறூன்றி மோசமாக, கூர்மையாக புரையோடிப் போயிருக்கிறது. இதற்கு பெரிய சமூக ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் தேவையில்லை. ”கைப்புண்ணை மறைப்பதற்கு கண்ணாடி தேவையா?

உடனடியாக இந்த விடயத்தில் இரு தரப்பும் நன் நோக்கில் முன்னே செல்ல வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடக்கம், முஸ்லிம் பொது சிவில் சமூகம் வரை இதில் பெரிதும் செயலற்ற நிலை இருப்பதுதான் ஆகப் பெரிய சோகம். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீம் ஒரளவு இதில் அக்கறையோடு இருந்து வருவதை , தனிப்பட்ட வகையில் நாம் அறிவோம். இந்த பெரும்பான்மை போக்கு அரசியல் தெளிவின்மையா? அல்லது ஆபத்தை உணராத அசமந்தமா என்பது நம்முன் உள்ள கேள்வி.

இந்த முரண்பாடு நிறைந்த நிலைக்கு இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைமைகள் பிரதான காரணமாகும். யார் தொடங்கி வைத்தது? யார் முடித்து வைப்பது என்கிற பிரேத பரிசோதனை அல்ல இது. கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் இருப்புடனும் வாழ்வுடனும் அவர்களது சமகால, எதிர்கால வாழ்வுடனும் சம்பந்தப்பட்ட விடயம் இது.

தவராசா கலையரசன் அவர்களை தமிழரசுக் கட்சி, அம்பாரை மாவட்டத்திற்கான தேசியப்பட்டியல் பிரதிநிதியாக நியமித்தமையானது தமிழர் அரசியலில் பல்வேறு தாங்கங்களையும், அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தும். முஸ்லிம்களைப் பொறுத்தவையிலும் இது மிக முக்கியமான அரசியல் தீர்மானமாகும்.

இப்படியான துணிச்சல்மிக்கதும், பரந்தபட்ட அரசியல் பார்வையுடையதுமான முக்கிய முடிவை தமிழரசுக் கட்சி எடுக்காது விட்டால், அம்பாரை என்பது கருணாவின் அரசியலில் முக்கிய தளமாக மாறும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், முஸ்லிம்களின் மேலாதிக்கம் மற்றும் அதிகார, நிர்வாக புறக்கணிப்பால், தாம் ஒடுக்கப்படுகிறோம், தொடர்ந்தும் சுரண்டப்படுகிறோம் என்கிற தமிழ் மக்கள் மத்தியில் கருணா ஒரு ஆபந்தபவணாக மாறும் துரதிருஷ்டம் நிகழ்ந்திருக்கும். இதன் முதல் படியை தமிழரசுக்கட்சித் தலைமை தடுத்திருக்கிறது. ஆனால் இதனை நடைமுறையில் மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், முஸ்லிம் சிவில் சமூகத்திற்கும் உள்ளது.

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களும், அதன் அரசியல் பிரதிநிதிகளும் தொடர்ந்தும் தாம் கடந்த கால வழிகளிலும், அதன் சிந்தனைகளிலும் தான் செல்வோம், நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யாத ”சுத்த சுவாமிப்பிள்ளைகள் ” என வாதங்களை முன் வைப்பார்களாயின் , வரலாற்றுக் கண்ணிகளை உணரத் தவறியவர்காளாவர்.

மேலாதிக்கம் என்பது ஒரு இனத்தினுடைய , ஒரு தேசத்தினுடைய , ஒரு கருத்தியலுடைய அரசியல் அதிகாரத்தினால் , அதன் அகங்காரத்தால் மட்டும் வருவதல்ல, அது ஒவ்வொரு தனி மனிதனுக்குள் இருக்கும் சிந்தனைகளுடனும் அவர்களது செயற்பாட்டுடனும் தொடர்புடையது. ஒரு பிராந்தியத்தில், ஒரு நாட்டில், ஒரு பிரதேசத்தில் ஒடுக்கப்படுவோர், இன்னொரு ஒரு பிராந்தியத்தில், ஒரு நாட்டில், ஒரு பிரதேசத்தில் ஓடுக்குவோராக இருப்பதுதான் அரசியல் வரலாறும் மனித, சமூகப் பாடங்களுமாகும். 

அம்பாரை மாவட்டத்தில் இழக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள இளம் மக்கள் பிரதிநிதியான தவராசா கலையரசன், அம்பாரை நிமைமையில் , அங்கு வாழும் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கும், அவர்கள் மீது காட்டப்படும் நியாயமான புறக்கணிப்புகளுக்கும் எதிராக உரத்து குரல் கொடுங்கள். அம்மக்களுக்காக உங்களை அர்ப்பணித்து பாடுபடுங்கள். அதற்கு மாற்றாக , வெறும் வாக்கு அரசியலுக்காக இனவாதத்தினை ஒரு போதும் ஊக்குவிக்காதீர்கள். 

தமிழரசுத் தலைமை வரலாற்றில் மீண்டுமொருமுறை தன்னை நிருபித்திருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகளே எப்போது உங்களை நீங்கள் நிரூபணம் செய்யப் போகிறீர்கள். முஸ்லிம் சிவில் சமூகமே எப்போது நீ உணர்வாய்? ”ஒரு கை தட்டி ஓசை வராது ” என்பதை. தமிழரசுக் கட்சி தலைமைகளே , உங்கள் கட்சியின் தலைவர் , நீண்ட அரசியல் வரலாறு கொண்ட உங்கள் கட்சியின் தலைவர் திரு மாவை சேனாதிராசா இந்த பதைவியை தான் வேண்டி நின்ற போதும் , குரலற்ற அம்பாரை தமிழ் மக்களுக்காகவும், மேலாதிக்க அரசியல் வன்மம் கொண்டோரின் கபடத் திட்டங்களை முறியடித்து, நடைமுறை அரசியல் காய் நகர்த்தல்களுக்கு ஒரு சரியான சரியான முடிவின் மூலம் அரசியல் தீர்மானத்தினை மேற் கொண்டதற்காகவும் நாம் உங்களை இந்த விடயத்தில் மனம் கொள்கிறோம். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe