உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்...
அவரவர்க்கு உரித்தேயான பலவேலைகள், பொறுப்புக்கள் சமூகத்தில் உண்டு. அதனை அவரவர்களே செய்யவேண்டும். ஆனால் இங்கு அரசியல் பொறுப்பாளர்கள், தாங்கள் சரி என்று நினைத்துக்கொண்டு தொடர்ச்சியாக பாதை தடுமாறி ஒரே பிராந்தியத்துக்குள் தங்களுக்குள்ள போட்டி அரசியலால் பிழையாக சமூகத்தை வழிநடத்தும்போது அதனை திருத்துவது அல்லது மாற்றீடு செய்வது எல்லோரினதும் பணியாகிவிடுகின்றது.
உண்மையில் சமூகத்தில் அரசியல் முத்திரை கொண்ட புத்திஜீவிகள் இருப்பதுபோலவே, சமூகம் என்ற முத்திரை கொண்ட நடுநிலையான புத்திஜீவிகள்/மக்கள் பல மடங்கு அதிகம் காணப்படுகின்றனர். இந்த அரசியல் முத்திரையில் இருந்து மறைந்து வாழும் புத்திஜீவிகளின் கருத்துக்கள் உங்கள் அரசியல் பணிக்கு உள்வாங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வெறும் வெற்றுக்கோஷம் போடுபவர்கள் மாத்திரமே உங்களை சுற்றி எஞ்சியிருப்பர்.
எனவே சகோதர அரசியல்வாதிகளே! சுயவிமர்சனத்துடன் அவ்வப்போது தங்களைத் தாங்கள் சரிசெய்து கொள்ளாதவர்களுக்கு அரசியல் பொறுப்பு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. அரசியல் பிரதிநிதி என்பவர் மக்கள் உள்ளங்களை பிரதேசம், இனம் கடந்து வென்று மக்களுக்காக பணி செய்வதற்காக தன்னை எப்போதும் அர்ப்பணித்தவர். ஆனால் நீங்கள் உங்கள் பணியை மறந்து உங்கள் தேவைக்காக இனவாதம் பிரதேசவாதம் பேசுகின்றீர்கள், பிரச்சனைகளை மிகைப்படுத்துகிண்றீர்கள். ஒட்டுமொத்த சமூகத்தில் பிரிவினைவாத கலாச்சாரத்தை வெறும் கோஷ/பீரங்கிப் பேச்சால் விதைக்கிண்றீர்கள்.
சுமூகமாக மிக இலகுவாக தீர்த்துவைக்கவேண்டிய/செய்யவேண்டிய பலவிடயங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவைகளையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் காலங்களில் மேடையில் பேசவேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ பேசித்திரிகிண்றீர்கள். ஏதோ ஒரு விதத்தில் சமூக அங்கீகாரம் கிடைத்தவுடன் சொந்த மக்களுடன் பேசும் அன்புத் தொனியை பின்னர் அதிகாரத்தோணியாக மாற்றிக் கொள்கின்கிறீர்கள். இவை அனைத்தும் இவ் இலத்திரனியல் உலகில் வரலாற்றுப்ப பதிவுகளாக பதிவேற்றப்படுகின்றது, இவைகள் உங்கள் இருப்புக்களை மாத்திரமல்ல சமூகத்தையே சிலவேளை கேள்விக்குறியாக்கும்.
மறந்துவிடாதீர்கள் இது மக்கள் சேவைக்கான அமானிதம், மாறாக இது உங்களின் அரசாங்கத் தொழில் அன்று. நீங்கள் மக்கள் ஆணை கிடைத்தவுடன் அதிகாரம் மிக்க அதிகாரியாகிவிடமுடியாது.
சரி ஊர் விடயத்துக்கு வருவோம்.
நமது சம்மாந்துறையை பாரளுமண்றப் பிரதிநிதி அற்றுப் போவதற்கு யார் எதைக்கூறினாலும் மிகப்பிரதானமான காரணம்; கணிசமான வாக்கு வங்கியை கொண்ட சகோதரர்கள் மாஹிர், நௌஷாட், மன்சூர், VC இஸ்மாயில், அஸ்பர் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு தங்களுக்குள் தாம் பிரிந்து கொண்டமையே...
அல்குரான் இவ்வாறு கூறுகின்றது
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். (அல்குரான் 3:26)
உங்களை பற்றி மக்களுக்குள் உலாவரும் விமர்சனங்கள்.
01. ஆளுமை ரீதியாக சகோதரர் மன்சூருக்கு உள்ள வரவேற்ப்பு மக்கள் உள்ளங்களை கவர்தலில்/மக்கள் அரவணைப்பில் இல்லை, சிலர் சிலவேளை உங்களை தலைக்கனம் உள்ளவர்களுக்கு ஒப்பாக பார்க்கின்றனர். எனவே உங்கள் அணுகுமுறையில் பாரிய மாற்றம் அவசியம் என்று கருதுகின்றனர்.
02. சகோதரர் மாஹிர் அவர்களுக்கும் நௌஷாட் அவர்களுக்கும் சேவை, மக்கள் அரவணைப்பில் இருக்கின்ற வரவேற்ப்பு கொள்கை உறுதி, மற்றும் ஆளுமைப் பண்புகளில் குறைவாகவே கணிக்கின்றனர்
03. அதேபோன்று சகோதரர் VC இஸ்மாயில் அவர்களை, சந்தர்ப்பம் கிட்டியும் நழுவவிட்டவராகவும், கொள்கையில் உறுதி அற்றவராகவே பார்க்கின்றனர்.
04. சகோதரர் அஸ்பர் இன்னும் தனது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியவராகவே கருதுகின்றனர்.
எனவே கடந்த தேர்தல் முடிவுகளுக்கும் சமூக அங்கீகாரத்துக்கும் அதன் வரிசைக்கும் வரிசைக்கேற்பவும் மேற்குறிப்பிட்ட இந்த சமூக விமர்சன யாதர்த்தங்களை உணர்ந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தங்களை தாங்களே மாற்றிக் கொள்ளாதவரை உங்கள் அரசியல் எதிர்காலம் மிகக் குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
குறிப்பு:
-நன்றி-
10-08-2020
அபூ அப்துல் ஹாதி