ஒற்றுமை பற்றி சதாவும் பேசிக் கொண்டிருந்தவர். புத்திசாலி மட்டுமல்ல தைரியசாலியும் கூட.
இவர் ஒருநாள் அகால மரணமடைந்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
அவரது பிள்ளைகள் சொத்துக்காக சண்டை பிடித்துக் கொள்கின்றனர். அதனாலேயே அவர்களுக்கு இடையில் சண்டைகள், பிளவுகள் வருகின்றன. தந்தையின் மரணம் குறித்து எதனையும் ஆராயாமல் அவரது புகழை, கௌரவத்தை பயன்படுத்தி ஆளுக்கொரு 'வியாபாரத்தை' தொடங்குகின்றனர்.
அவர்களது வியாபாரம் எல்லாம் 'தந்தையின் பெயரிலேயே' இடம்பெறுகின்றது. ஆனால் தந்தையின் வழிகாட்டுதல்கள் எதனையும் பிள்ளைகளில் பலர் பின்பற்றவேயில்லை.
தந்தை போதித்த சமூக சிந்தனை, நல்வழி எல்லாவற்றையும் மறந்து எப்படியும் வாழ்ந்தால் சரி என்ற நிலைக்கு அவர்கள் வருகின்றனர்.
வெளியில் தந்தையின் பெயர்ப்பலகைiயை மாட்டிக் கொண்டு உள்ளே அவர் 'விரும்பாத' பல வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு வருடமும் அவர் மரணித்த நாளன்று அவருடைய புகைப்படத்தையும் கொள்கைகளையும் தூசுதட்டி வெளியில் எடுத்து வைத்து, புலம்பி அழுகின்றனர். பின்னர் தந்தையை மறந்து விடுகின்றனர், அவரது அறிவுரைகளை பிள்ளைகள் பின்பற்றுவதும் இல்லை.
சரியாகச் சொன்னால், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுக்குப் பின்னரான முஸ்லிம் அரசியலின் நிலையும் இதுதான்! அவரது பிறந்த தினம், மரணித்த நாள் மற்றும் தேர்தல் காலங்கள் என சீசனுக்கு மட்டும் நினைவுகூரப்படும் ஒருவராக பெருந்தலைவர் அஷ்ரப் மாற்றப்பட்டிருக்கின்றார்.
அதுதவிர, அவரது கொள்கைகளை, வழிகாட்டுதல்களை, உரிமையும் அபிவிருத்தியும் கலந்த அரசியல் போக்கை கடைப்பிடிக்கின்ற எந்த வாரிசுகளையும் காண முடியவில்லை.
தமது கையில் இருக்கின்ற சரக்கை விற்பனை செய்வதற்கான ஒரு வர்த்தக நாமமாக அஷ்ரபின் பெயரும், புகைப்படமும் பயன்படுத்தப்படுகின்றதே தவிர உண்மையில் எதைச் செய்ய வேண்டுமென்று அவர் சொல்லித் தந்தாரோ அதை மேற்கொள்ள இன்றைய முஸ்லிம் தலைவர்களும் தளபதிகளும் தயாரில்லை.
'அஷ்ரப் அதைச் செய்தார், இதைச் செய்தார்' 'அந்த உரிமையைப் பெற்றுத் தந்தார், இதற்காக போராடினாh'; என்று சொல்லுகின்ற அரசியல் வாரிசுகளை காண முடிகின்றதே தவிர, அந்த வழியில் தாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்று நிரூபிக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை காணக் கிடைப்பதில்லை.
தனித்துவமான அஷ்ரஃப்
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி கேசரியில் இதற்கு முன்னரும் பல தடவை எழுதியும் பேசுயும் ஆயிற்று. ஆனால், அவர் விட்டுச் சென்ற இடம் இன்னும் வெற்றிடமாக இருப்பதாலும், கடந்த 20 வருடங்களாக தொடர்ந்தும் அவரது வெற்றிடம் உணரப்படுகின்றமையாலும், இன்றைய முஸ்லிம் தலைமைகள் நினைவுதினத்திலும் தேர்தல் பிரசாரங்களிலும் மாத்திரம் அஷ்ரபை நினைந்தழுவதாலும், மீண்டும் மீண்டும் அவர் பற்றி எழுத வேண்டிய தேவை எழுகின்றது.
மர்ஹூம் அஷ்ரப் வானத்தில் இருந்து இறங்கிய தேவதூதரும் இல்லை. தவறுகளுக்கு அப்பாற்பட்ட மனிதரும் இல்லை. அவர் செய்த காரியங்கள், அரசியல் நகர்வுகள் எல்லாமே சரி என்றும் சொல்வதற்கில்லை.
அவரைக் கொண்டாடுகின்றோம் என்பதற்காக அதற்கு முன்பிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செய்த சேவைகளை மூடிமறைக்கின்றோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. பிழை காண்பது என்றால், அவரிலும் பிழை காணலாம். அவரது சில செயற்பாடுகளையும் வேறுகண்ணோட்டத்துடன் விமர்சிக்கலாம். அது வேறுவியடம்.
ஆனால் அதனையெல்லாம் தாண்டி இன்று வரைக்கும் தனித்துவமான ஒரு அரசியல் தலைமையாக மக்கள் மனங்களில் அவர் வீற்றிருக்கின்றார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கிழக்கை மையமாகக் கொண்ட முஸ்லிம தனித்துவ அடையாள அரசியலில் இன்று வரைக்கும் ஒரு முன்மாதிரி தலைவராக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இருக்கி;ன்றார்.
இலங்கையின் முஸ்லிம் அரசியலை நோக்குகின்ற போது அ.மு, (அஷ்ரபுக்கு முன்) அ.பி. (அஷ்ரபுக்குப் பின்) என்று நோக்க வேண்டியிருக்கின்றது. அஷ்ரபை ஒரு நியம அளவுகோலாக வைத்தே, இன்றுவரையும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சேவைகளை முஸ்லிம் மக்கள் அளந்து பார்க்கி;ன்றனர் என்பதை வெளிப்படையானது.
அவரது மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பக் கூடிய, முஸ்லிம்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு தலைவர் உருவாகியிருப்பாராக இருந்தால் இன்றும் முஸ்லிம் சமூகம் மர்ஹூம் அஷ்ரபை பற்றி இந்தளவுக்கு பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற இடத்திலேயே முஸ்லிம் சமூகம் 20 வருடமாக நிற்;கின்றது. 'அவர் இல்லாமல் போய்விட்டாரே' என்று இப்போதும் மக்கள் அங்கலாய்க்கின்றார்கள்.
இவ்வளவு காலமாக முஸ்லிம் கட்சிகள், புதுப்புது அரசியல் தலைமைகள் உருவாகியிருக்கின்றார்களே தவிர, முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல தலைமைகள் கிடைக்கவில்லை. வடிவேல் 'நானும் ரவுடிதான்' என்று சொல்லும் பாணியில், 'நானும் தேசிய தலைவர்தான்' என்று சொல்லிக் கொண்டு பலர் களத்திற்கு வந்தார்கள் என்றாலும், அவரைப்போல பொதுவாக முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமைத்துவம் ஒன்று உருவாகவில்லை. அதனால் அவர் விட்டுச் சென்ற தலைமைத்துவ வெற்றிடம் இன்று வரை காலியாகவே இருக்கின்றது.
மு.கா.வின் உதயம்
அம்பாறை மாவட்டத்தில் பிறந்து வளர்;ந்த எம்.எச்.எம்.அஷ்ரப் இளமைக் காலங்களில் ஒரு கவிஞராக, கதாசிரியராக, நல்ல மேடைப் பேச்சாளராக இருந்தார். பின்னர் சட்டம் பயின்றார். இக் காலங்களில்தான் அரசியல் மீதான தீவிர வேட்கை அவரை ஆட்கொண்டது. தமது பிராந்தியத்தில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த அஷ்ரப், 1970 களில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடள் இணைந்து செயற்பட்டார்.
1977இல் அஷ்ரப் உள்ளிட்ட பல முஸ்லிம் அரசியல் ஆளுமைகளை உள்ளடக்கிய அரசியல் அணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டது. இருப்பினும், அதன்பிறகு அந்த உறவு நீடிப்பது சாத்தியமற்றுப் போனது. பெருந்தேசியக் கட்சிகளுடன் ஏற்பட்ட அரசியல் உறவும் சரிப்பட்டு வரவில்லை. எனவே, மாற்று வழியொன்றை தேட வேண்டிய காலத்தின் கட்டாயம் அஷ்ரபுக்கும் அவரோடு அன்றிருந்த தலைவர்களுக்கும் ஏற்பட்டதெனலாம்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொழில் இல்லாமல் உலவித் திரிந்த காலம் என்பதால், கிழக்கில் இருந்து கணிசமான முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக்குழுக்களில் சாரை சாரையாக சென்று இணைந்து கொண்டிருந்தனர். ஆயினும் 1980களின் நடுப்பகுதிக்குப் பிறகு முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்கள் திருப்பப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே முஸ்லிம்களை அரசியல்மயப்படுத்துவதும் இளைஞர்களை ஆயுதங்களின்பால் செல்வதை தடுப்பதும் அன்றைய அவசர தேவையாக இருந்தது.
இந்தப் பின்னணியிலேயே 1981இல் ஒரு அமைப்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது. அதன்பின்னர் 1986 இல் அது ஒரு கட்சியாக பரிணாமம் எடுத்தது. இன்று அந்தக் கட்சியில் இருந்துகொண்டு 'கனி' சாப்பிடும் எல்லோரும் அன்று 'மரம்' நடப்பட்டபோது அஷ்ரபுடன் இருந்தவர்கள் அல்லர் என்பது இவ்விடத்தில் நினைவு கொள்ளத் தக்கது.
முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கம் என்பது இலங்கை முஸ்லிம் அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முன்னரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிறிய முஸ்லிம் கட்சிகளும் இருந்தபோதும், எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் அவரோடு அன்றிருந்த ஆளுமைகளின் கூட்டுமுயற்சியால் உருவான மு.கா. குறுகிய காலத்திற்குள் அதீத எழுச்சி பெற்றது. இதற்கு அஷ்ரப் மட்டுமன்றி அப்போதிருந்த ஆயுதக் ஒடுக்குமுறை, சமூக அரசியல் பின்னடைவு போன்றவையும் மிக முக்கிய காரணங்கள் எனலாம்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவராக அதன் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இருந்தார். அதன்பிறகு 2004 தேர்தலிலும் எம்.பி.யாகி அமைச்சுப் பதவிகளை வகித்தது மட்;டுமன்றி, சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் மிகப் பலம்பொருந்திய அரசியல் தலைமையாகவும் இருந்தார் என்பதை நாடறியும்.
ஹெலி விபத்து?
2000 செப்டெம்பர் 16ஆம் திகதி தனது தாய்வீடான அம்பாறை மாவட்டத்திற்கு செல்வதற்காக காலை 9.25 மணியளவில் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் இருந்து விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ.-17 ரக ஹெலிகொப்டரில் புறப்பட்ட அஷ்ரப் மற்றும் குழுவினர் அம்பாறை மாவட்டத்திற்கு சென்று சேரவில்லை.
அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்த நிலையில், அதில் பயணி;த்த அனைவரும் உயிரிழந்தனர். கேகாலை மாவட்டம் அரநாயக்க மலைத்தொடரில் இருந்து முஸ்லிம்களின் மாபெரும் தலைவரான எம்.எச்.எம்.அஷ்ரப் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வை விட, அரநாயக்கவில் செப்டெம்பர் 16 இல் நிகழ்ந்த இந்த விபத்து (?) ஏற்படுத்திய அதிர்வு அதிகமாகும்.
அழுகையும் நிசப்தமும் அரசியல் வெறுமையும் நிறைந்த அந்த மரணத்திற்குப் பின்னரான நாட்களை நினைத்தால் இப்போதும் உடல் நடுங்குகின்றது. இலங்கை முஸ்லிம்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்றும் மீளவில்லை.
மு.கா. ஸ்தாபக தலைவரின் மரணத்திற்குப் பின்னர், அக்கட்சியின் இணைத் தலைவர்களாக பேரியல் அஸ்ரப் மற்றும் றவூப் ஹக்கீம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு ஹக்கீம் தனித் தலைமையாக பிரகடனப்படுத்தப்பட்டார். ஆனால் ஹக்கீமை கொண்டாடியவர்கள் சில வருடங்களுக்குள்ளேயே அக்கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இன்றுவரை இது இந்த வெளியேற்றம் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.
பின்னர், அஷ்ரபின் சிஷ்யர்களுள் ஒருவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா ஒரு கட்சியை ஆரம்பித்தார். அஷ்ரபோடு இணைந்து செயற்படாவிட்டாலும் அவரது அரசியலால் கவரப்பட்ட றிசாட் பதியுதீன் இன்னுமொரு காங்கிரஸை தொடங்கினார். அஷ்ரபின் மிக நெருங்கிய நண்பரான ஹசன்அலியும் பஷீரும் ஒரு கட்சியைப் பொறுப்பெடுத்தனர். இதற்கிடையில், மறைந்த தலைவரால் உருவாக்கப்பட்ட நுஆ கட்சியை செயலிழந்து, கட்சிப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அதே பெயரில் இன்னுமொரு கட்சி உதயமாகி அசாத் சாலி அதன் தலைவரானதும் நமக்குத் தெரியும்.