Ads Area

யானைகளின் படையெடுப்பால் உயிராபத்தை எதிர்நோக்கும் கல்முனை மக்கள் - மாநகர சபை கவனயீனம்.

நூருல் ஹுதா உமர் 

கல்முனை மாநகர சபையினால் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் தினமும் கொட்டப்படும் திண்மக்கழிவுகளினால் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட தொடர்மாடி குடியிருப்பில் வாழும் மக்கள் பல அசௌகரியங்களை  எதிர்கொள்வதாக அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

மேலும் கருத்து தெரிவித்த அப்பிரதேச மக்கள், அங்கு கொட்டப்படும் குப்பைகளால் காற்றோடு தூர்நாற்றம் அதிகமாக வீசுவது ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டிருக்கின்றது. அந்த தூர்நாற்றத்தை சிறுவர்கள், வயோதிபர்கள் தினசரி சுவாசிக்க வேண்டியவர்களாக மாறி இருக்கிறார்கள். இவ்வாறான விளைவுகளால் அங்கு வாழ்கின்ற சிறியவர்கள், வயோதிபர்கள் மட்டுமின்றி அண்மையில் உள்ள வைத்தியசாலை மற்றும் குடியிருப்புக்களில் உள்ள நோயாளிகள் கூட அத்தூர்நாற்றத்தையே சுவாசிக்கின்றார்கள். அது மட்டுமின்றி பல இன்னல்களை எதிர் நோக்குகின்றார்கள் எனவே கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர், சுகாதார பிரிவினர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இதனை கவனத்தில் கொண்டு இதற்குரிய தீர்வை உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். மேலும் 

கல்முனை மாநகர சபையினால் அங்கு கொட்டப்படுகின்றன குப்பை கூழங்கள்களால் பகல் வேளைகளிலும் இரவு நேரங்களிலும் யானைக்கூட்டம் தொடர்ந்தும் அந்தக் குப்பைகளை உண்பதற்காக படையெடுத்து வருவதை காணக் கூடியதாகவுள்ளது. அதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் அந்த யானைக் கூட்டங்கள் தொடர்மாடி குடியிருப்புக்குள் ஊடுருவதால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.அது மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் அதிகாலைப் பொழுதிலும் எம் மீனவர்கள் தம் தொழிலுக்கு செல்வதற்கு சிரமமாக இருக்கின்றது.

யானையின் வருகையால் சிறுவர்கள்  யானையை  செல்லப்பிராணியாக நினைத்து விளையாட முயற்சிப்பது பெரும் ஆபத்தை கொண்டுவரும் என்பதே உண்மை. அதுமட்டுமின்றி மழைக்காலம் ஆரம்பித்திருப்பதால் உடனடி தீர்வை முன்வைத்து அங்குவாழும் பெரியோர்கள், நோயாளிகள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த துரிதகதியில் இந்த பிரச்சினையை தீர்க்க கல்முனை மாநகர சபை முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe