Ads Area

பிள்ளையான் பிணையில் விடுதலை (விபரம் உள்ளே)

நூருள் ஹுதா உமர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (24) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.விக்னேவரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனையவர்களுக்கும் நீதிபதியால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான, பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் பாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe