(எம்.மனோசித்ரா)
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இவ்விடயத்தில் மத ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ எவ்வித சலுகைகளையும் வழங்க எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
உயிரிழப்புக்களின் பின்னர் எவ்வாறான சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமையவே பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நீர் கொழும்பில் மீனவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான பரிசோதனைகளில் சிலருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்திற்கு அப்பால் ஏனைய மாவட்டங்களில் மிகக் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்படுகின்றனர். அவர்கள் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அபாயமற்ற நிலைமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவை விடுவிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்திற் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக குறித்த பிரதேசங்களும் , முடக்கப்படாத பிரதேசங்களும் அபாயமற்றவை என்று எண்ணி சுதந்திரமாக நடமாட முடியாது.
அத்தோடு வெளிமாகாணங்கலிலிருந்து மேல் மாகாணத்திற்கு செல்வதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று சகலரும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.
தற்போது நாட்டில் நாளொன்றில் சுமார் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின்றன. அவ்வாறு கடந்த வாரத்தில் பதிவான மரணங்களில் 80 சதவீதமானவை 60 வயதிற்கு மேட்பட்டவர்களது உயிரிழப்புக்களாகும். இவர்களுக்கு வேறு நாட்பட்ட நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நாட்பட்ட நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் என ஏதேனுமொன்றால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
எனவே நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எடுக்கும் மருந்துகளை இடைவிடாமல் தொடர வேண்டும். அத்தோடு அநாவசியமாக சமூகத்திற்குள் சென்று நடமாடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழப்புக்களின் பின்னர் எவ்வாறான சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமையவே பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் அல்லது குடும்பங்களில் உள்ளவர்கள் உயிரிழந்தால் நிச்சயம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும். அவ்வாறின்றி ஏனைய பிரதேசங்களில் மரணங்கள் பதிவானால் பிரதேச சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமையவே பரிசோதனை குறித்து தீர்மானிக்கப்படும்.
இதே வேளை கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. உலகலாவிய ரீதியில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மதங்கள் அல்லது இனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. கொவிட் அச்சுறுத்தலை தடுக்கும் வகையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்கள் விஞ்ஞானபூர்வமானவையாகவே முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
virakesary News.