Ads Area

கல்முனைப் பிராந்தியத்தில் 8 பிரதேசங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம்!

 (காரைதீவு நிருபர் சகா)

கல்முனைப் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக மழையைத் தொடர்ந்து கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று சம்மாந்துறை பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய அபாயகரமான நிலமை காணப்படுகிறது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மழை நீர் தேங்கி நின்று நுளம்புகள் அதிகமாகி டெங்கு நோயைப் பரப்பி வருகிறது. தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலரும் அறிவீர். எனவே பொதுமக்கள் கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் ஒரு 30நிமிடங்கள் நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றுங்கள் அல்லது நீர் தேங்கி நிற்காதவாறு கவனியுங்கள்.

பயன்படுத்தப்படாத வீடுகள், வெற்று வளவுகள் மற்றும் கட்டட நிர்மானம் நடைபெறும் இடங்களிலும் அவதானம் செலுத்துங்கள்.

கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகளை நுளம்புகள் நுழையாத வண்ணம் நுளம்பு வலைகளினால் மூடுங்கள். வீட்டு மொட்டைமாடிகள் மற்றும் கூரைப் பீலிகளில் கரிசனை எடுங்கள்.

பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பொறுப்புதாரிகள் இவ்விடயத்தில் அதிகம் சிரத்தை எடுங்கள். நுளம்புக் கடியிலிருந்து உங்களையும் பிள்ளைகளையும் பாதுகாருங்கள்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அல்லது காய்ச்சல் குறைந்தும் உடலில் ஏதும் மாற்றங்கள் இருந்தாலும் இரத்தப் பரிசோதனைக்காக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள். போதிய நீராகாரம் மற்றும் ஓய்வை உறுதி செய்யுங்கள்.

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகருக்கு சுயமாகவே முன்சென்று ஒத்துழைப்பு வழங்குங்கள்.

டெங்குநோய்மிகவும்ஆபத்தானது. உங்களின் பாதுகாப்பு உங்களின் கரங்களில். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe