Ads Area

பேய் விரட்டுவதாகக் கூறி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி கைது!

தமிழ்நாடு, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி, சேலம் இரும்பாலை அருகே சுக்கம்பட்டி பகுதியில், ரவீந்திரன் என்ற  விவசாயியின் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 15 வயதிலும், 13 வயதிலும் மகள்கள் உள்ளனர். இவர்களும் தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது, விவசாய தோட்டத்திலும் சிறுமிகள்  வேலை செய்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில், இரண்டு சிறுமிகளின் நடவடிக்கையிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. மனநலம் பாதித்த நிலையில், இரண்டு சிறுமிகளும் இருந்ததால், சிறுமிகளுக்கு பேய் பிடிதிருக்கலாம் என கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனை நம்பிய சிறுமிகளின் பெற்றோர், பேயை விரட்டுவதற்காக கோயில் கோயிலாக அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால், சிறுமிகளின் பெற்றோர் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். 

இந்த நிலையில்தான், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற மந்திரவாதி குறித்து கேள்விப்பட்டு, சிறுமிகளை பெற்றோர் அவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மந்திரவாதி சேகர், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து பேயை விரட்ட வேண்டும் என்றும், அதற்காக சிறுமிகள் இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 

இதனை நம்பிய பெற்றோர் சிறுமிகளை சேகர் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சேகர், பேய் விரட்டுவதாக கூறி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து வர சென்ற பெற்றோருக்கு அங்கு மேலும் அதிர்ச்சிதான் காத்திருந்தது. முன்னைக் காட்டிலும் சிறுமிகளின் நிலை மோசமாக இருந்துள்ளது. என்ன ஏது என பெற்றோர் விசாரித்தபோது, மந்திரவாதி தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி சிறுமிகள் கதறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து, மங்களாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சேகரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் போலி மந்திரவாதி என்பதும், சிறுமிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையால் நொந்து போன பெற்றோர், சுக்காம்பட்டியிலிருந்து, சொந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். அப்போதுதான்,  சிறுமிகள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பேய் பிடித்தது போல் இருந்ததற்கான காரணம் பெற்றோருக்கு தெரியவதுள்ளது. சிறுமிகளின் பெற்றோர் தங்கி வேலை செய்த விவசாய தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரன், அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால்தான், அந்த சிறுமிகள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். ஆனால், இதனை அறியாத பெற்றோர், சிறுமிகளுக்கு பேய் பிடித்திருப்பதாக நம்பி, மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, அந்த சிறுமிகளின் பெற்றோர், சுக்காம்பட்டி விவசாயி ரவீந்திரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான விவசாயி ரவீந்திரனை தேடி வருகின்றனர். 

சகோதரிகளான இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சிறுமிகளிடம் அத்துமீறிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe